நேற்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: 2 மசோதாக்கள் நிறைவேறியது

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும் கேள்வி நேரத்தை தொடங்க சபாநாயகர் முடிவு செய்தார்.

அப்போது, கடந்த சிறப்பு கூட்டத்தொடரின்போது தன்னை அவதூறாக பேசிய பா.ஜனதா எம்.பி. ரமேஷ் பிதூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை தனது கழுத்தில் தொங்கவிட்டவாறு பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி வந்திருந்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த சபாநாயகர், அந்த அட்டைகளை நீக்கக்கோரினார். ஆனால் இதற்கு டேனிஷ் அலி மறுத்து கோஷமிட்டார். அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலரும் கோஷமிட்டனர்.

இதைத்தொடர்ந்து அவையை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார். மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. மதிய இடைவேளைக்குப்பின் அவை மீண்டும் கூடியபோது, பல்வேறு விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர்.

குறிப்பாக உத்தரகாண்ட் சுரங்க விபத்து, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சாதனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவையில் விவாதம் நடந்தது.

பின்னர் சட்டப்பணிகளை ஒழுங்குபடுத்தும் வக்கீகள் (திருத்தம்) சட்ட மசோதா அவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த மசோதா அவையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே மாநிலங்களவையும் நேற்று காலையில் தொடங்கியதும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ள ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தாவின் இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டது.

அவை பிற்பகலில் கூடியபோது 125 ஆண்டு கால தபால் அலுவலக சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.