In case of threat sent by e-mail, inquiry to concerned company | மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விசாரணை

பெங்களூரு : ”வரும் நாட்களில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் விசாரணை நடத்தப்படும்,” என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கடந்த டிச., 1ம் தேதி நகரின் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, இதுவரை 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்தாண்டு இதுபோன்ற மிரட்டல் விடுத்ததில் தொடர்பு இருப்பது தெரிகிறது. இதுதொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் இன்டர்போலுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மிரட்டல் இந்தியாவுக்குள் இருந்து வந்ததா அல்லது வெளிநாட்டில் இருந்து வந்ததா என்பதை உறுதி செய்வது சிரமம். இதற்காக நிபுணர்களின் உதவியை நாடி உள்ளோம்.

இதுபோன்ற மிரட்டல், அமெரிக்கா, ஜெர்மனி, ஜமைக்கா, மலேஷியா போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளன. இதுபோன்று மிரட்டல் விடுவதற்கான காரணம் குறித்து விசாரிக்கிறோம்.

பெங்களூரு நகரில் மதுக்கடைகள், பார் மற்றும் ரெஸ்டாரென்ட்கள், லாட்ஜ்கள் அருகில் அதிகளவில் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன.

இதைத் தடுக்கும் வகையில், கடந்த 3ம் தேதி இரவு நகரின் பல இடங்களில் சிறப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

நகரின் 577 மதுக்கடைகள், 969 பார் மற்றும் ரெஸ்டாரென்டுகள், 704 லாட்ஜ்கள், 1,682 பேக்கரிகள், 715 நகைக்கடைகள் உட்பட மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், 5,000 பொது மக்கள், 4,000 வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டன.

இவர்களில், பொது இடங்களில் புகை பிடித்ததாக, 2,425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.