மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த புயலால் தான் பாதிக்கப்பட்டது குறித்தும் அவரைச் சுற்றி நடக்கும் அவலங்கள் குறித்தும் நடிகை அதிதி பாலன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர், ” நான் திருவான்மியூர் ராதாகிருஷ்ணன் நகருக்குச் சென்றேன். அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் தற்போது இந்த ஏரியாவுக்குள் பம்ப் செய்யப்பட்டது. இங்கு இறந்து போன விலங்குகள் மிதந்துக் கொண்டிருக்கின்றன. இரண்டு குழந்தைகளையும் அவர்களின் பாட்டியையும் காப்பாற்றுவதற்காக நாங்கள் இதே தேங்கிய தண்ணீரில் நடக்க வேண்டியிருந்தது. இதற்கிடையில் கோட்டூர்புரம் அருகே 6 போலீசார் படகை செலுத்திக் கொண்டு ஒரு செல்வாக்கு மிகுந்த பெண்ணை காப்பாற்றச் சென்றனர். ” என நேற்றைய தினம் பதிவிட்டிருந்தார்.

இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்கு பதிலளித்த ஒருவரின் பதிவை அதிதி பாலன் பகிர்ந்திருந்தார். அதில்,” இது உண்மைதான். இங்கு குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலிருந்து மின்சாரம் இல்லை. நாங்கள் வீட்டின் மாடியிலிருந்து சில தொலைபேசி எண்களுக்கு அழைத்துப் பார்த்தோம். அந்த எண்களுக்கான இணைப்பு வேலை செய்யவில்லை. எங்கள் வீட்டின் முன்புரத்தில் இறந்துபோன எலிகள் மிதந்துக் கொண்டிருக்கின்றன. குழந்தைகளை காரில் தூங்க வைத்துவிட்டு வீட்டை மேலே மாற்றம் செய்து வருகிறோம்.” என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும்,”அதிமுகவின் தொகுதிகளில் வெள்ள நிவாரண வேலைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்பது உண்மையா? அரசுக்கு பதிலாக மீனவர்கள் அவர்களை காபாற்றுகிறார்களா?. வேளச்சேரி, மேடவாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் எனது நண்பர்கள், உறவினர்கள் படகுகளின் மூலம் மீட்கப்பட்டனர்.” எனப் பதிவிட்டுள்ளார்.
— Aditi Balan (@AditiBalan) December 5, 2023
இதுமட்டுமன்றி, சமூக வலைதளப் பக்கங்களில் உதவி கோரும் பலரின் பதிவுகளை நடிகை அதிதி பாலன் ரீ ட்வீட் செய்து வருகிறார்.