BAN vs NZ Test Match: நியூசிலாந்து அணி தற்போது வங்கதேசத்திற்கு (BAN vs NZ) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றை இரு அணிகள் விளையாட உள்ளன. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நியூசிலாந்தை வீழ்த்தியது. தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இருப்பினும், 66.2 ஓவரிலேயே 172 ரன்களுக்கு ஆல்-அவுட்டான நிலையில், தற்போது முதல் நாளின் மூன்றாவது செஷனில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. நியூசிலாந்து அணி பந்துவீச்சில் பிலிப்ஸ், சான்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும் டிம் சௌதி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதில் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க வங்கேதச அணியின் பேட்டிங்கில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் (Mushfiqur Rahim) 35 ரன்களை குவித்தார். அவரின் ஆட்டமிழந்த முறை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பேட்டிங் செய்யும்போது, பீல்டிங்கிற்கு இடையூறாக இருந்து பந்தை கையாண்டதால், (Handling The Ball) அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இந்த வகையில் அவுட்டாகும் முதல் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் ஆவார்.
கைல் ஜேமீசன் வீசிய 41ஆவது ஓவரில் பந்தை தடுத்தாடிய ரஹீம், பந்து ஸ்டம்பை தாக்கமால் இருக்க கையை பயன்படுத்தி சற்று தள்ளிவிட்டார். இப்படி செய்வது விதிகளின் அப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அவர் பேட்டாலோ அல்லது பேட் வைத்திருந்த கையாலோ பந்தை தடுக்கலாம். ஆனால், பேட் இல்லாத கையில் தடுத்தால் அவருக்கு அவுட் கொடுக்கப்படும். அதாவது பந்தில் டெட் ஆகாத நிலையில் இதை செய்தால் அவுட் கொடுக்கப்படும். அதன்பேரில், மூன்றாவது நடுவரின் ஆய்வுக்கு அடுத்து ரஹீமுக்கு அவுட் கொடுக்கப்பட்டது. ஒருவேளை, பந்து அவருக்கு காயத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் மட்டுமே வெறும் கையால் தடுத்தாலும் அவுட் கொடுக்கப்படாது.
Did Mushfiqur Rahim really need to do that? He’s been given out for obstructing the field! This one will be talked about for a while…
.
.#BANvNZ pic.twitter.com/SC7IepKRTh
— FanCode (@FanCode) December 6, 2023
இதுபோன்று இதுவரை 10 வீரர்கள் சர்வதேச அளவில் அவுட்டாகி உள்ளனர். ரஹீம் 11ஆவது வீரராக இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார். குறிப்பாக, மொகிந்தர் அமர்நாத், மோஷின் கான், மைக்கெல் வாகன் உள்ளிட்டோர் இந்த பட்டியிலில் உள்ளனர். ஆனால், இந்த விக்கெட் பந்துவீச்சாளரின் கணக்கில் வராது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் Timed Out முறையில் அவுட்டானார். வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹாசனின் முறையீட்டின் பேரில்தான் அப்போது அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. அப்போது பலரும் ஷகிப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சையை கிளப்பினர். தற்போது வங்கதேச வீரரின் இந்த அவுட் என்பது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் சாபம்தான் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.