Cricket News In Tamil: சிஎஸ்கே அணிக்கு வரும் 17ஆவது ஐபிஎல் சீசன் (IPL 2024) மிகவும் சிறப்பு வாயந்தது எனலாம். நடப்பு சாம்பியனாக சிஎஸ்கே களம் காண்பது மட்டுமின்றி தோனியின் கடைசி தொடராகவும் இது அமைய அதிக வாய்ப்புள்ளது என்பதும்தான். இதுவரை 5 முறை கோப்பைகளை வென்றிருக்கும், கடைசியாக 6ஆவது முறையாகவும் கோப்பையை வென்று சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை சரியாக அமைத்து கொடுத்துவிட்டு, ஓய்வு பெற்று விடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிஎஸ்கே சீக்ரெட்
மும்பை இந்தியன்ஸ் அணியும் (Mumbai Indians) 5 முறை கோப்பையை வென்றிருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி எப்போதும் பலராலும் கொண்டாடப்படும் அணியாகும். தோனிதான் அதற்கு முக்கிய காரணம் என்றாலும், அந்த அணியின் தொடர்ச்சியான செயல்பாட்டை கூறலாம். இதுவரை 16 தொடர்கள் நடைபெற்றிருக்கிறது.
இதில் 2016, 2017 ஆகிய இரண்டாண்டுகள் சிஎஸ்கே தடை செய்யப்ட்டிருந்தது, மேலும், 2020 மற்றும் 2022 ஆகிய இரண்டாண்டுகள் மட்டுமே சிஎஸ்கே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றதில்லை. மற்ற 12 சீசன்களிலும் சிஎஸ்கே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. மேலும், இத்தனை முறை பிளே-ஆப் வந்த அணியும் சிஎஸ்கேதான். இத்தனை முறை பிளே வந்ததற்கான முக்கிய காரணம், அந்த அணி அனுபவ வீரர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், இளம் வீரர்களுக்கு வழங்கும் வாய்ப்புகளும்தான் எனலாம்.
ராயுடுவுக்கு சரியான மாற்று
அப்படியிருக்க இந்த முறை சிஎஸ்கேவின் அனுபவ வீரர்களுள் முக்கிய நபரான ராயுடு (Replacement For Rayudu) ஓய்வு பெற்றிருக்கிறார். எனவே, வரும் ஏலத்தில் அவருக்கான இடத்தை சிஎஸ்கே நிரப்பியாக வேண்டும். அதாவது ஒரு இந்திய மிடில் ஆர்டர் பேட்டர்களை கொண்டு அந்த இடத்தை நிரப்ப வேண்டும். பலரும் மனீஷ் பாண்டே (Manish Pandey) இந்த இடத்தை பிடிப்பார் என கூறப்பட்ட நிலையல், தற்போது பலரின் வெளிச்சம் கருண் நாயரின் (Karun Nair) மீது விழுந்துள்ளது எனலாம்.
கர்நாடகாவின் பேட்டிங் பாரம்பரியத்தில் முக்கிய இடத்தை பிடிப்பவர் கருண் நாயர். இவரின் வருகை, கர்நாடகாவுக்கு ரஞ்சி கோப்பையையும், இரானி கோப்பையையும் பெற்றுகொடுத்தது. சென்னை சேப்பாக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவர் அடித்த 300 ரன்களை யாராலும் மறக்க முடியாது. ஆனால், ஃபார்மை இழந்ததால் அவர் இந்திய அணியில் தொடர முடியாமல் போனது. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் இடம்பெறாத இவர், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுலுக்கு ஏற்பட்ட காயத்தை அடுத்து மாற்று வீரராக வந்தார். ஆனால் எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
முரட்டு ஃபார்மில் கருண்
ஆனால், இந்தாண்டு ஐபிஎல் அவருக்கு பெரிய மாற்றத்தை கொண்ட வரலாம். அவர் சமீபத்தில் கர்நாடக டி20 தொடரான மகாராஜா கோப்பையில் மைசூரு வாரியர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு வந்தார். குறிப்பாக, பேட்டிங்கில் அவர் 12 இன்னிங்ஸில் 1 சதம் மற்றும் மூன்று அரைசதங்கள் உடன் 532 ரன்கள அடித்தார். ஸ்ட்ரைக ரேட் 162.69 ஆகும். கவுண்டி போட்டிகளிலும் இவர் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார். இவரின் இந்த சமீபத்திய பார்ம் இவருக்கு ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு பெரிய வாய்ப்பை வழங்கலாம்.
தோனியின் பிளான்…
இவருக்கு இந்திய துணைக் கண்டத்தில் விளையாடிய அனுபவம் அதிகமிருக்கிறது. எனவே, இவரை சிஎஸ்கே உள்ளிட்ட இந்திய மிடில் ஆர்டர் பேட்டர்களை தேடும் அணிகள் நிச்சயம் ஒரு ஆப்ஷனாக வைத்திருக்கும். சென்னை அணியில் ராயுடுவுக்கு இவரை பயன்படுத்த தோனி (Dhoni) திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஏலத்தில் (IPL Auction 2024) இவரும் 2 கோடி ரூபாயை தனது அடிப்படை தொகையாக நிர்ணயித்துள்ள நிலையில், சிஎஸ்கே அணியிடம் 31.4 கோடி ரூபாய் வரை இருப்பதால் இவரையும், ஷாருக்கானையும் சேர்த்து எடுக்க அதிக வாய்ப்புள்ளது.