ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த நிலையில், ராஜஸ்தானின் ஹவா மஹால் (Hawa Mahal) சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாலமுகுந்த் ஆச்சார்யா, தேர்தல் முடிவு வந்த அடுத்த நாளே (டிசம்பர் 4) தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து தனது தொகுதியில் இருக்கும் சாலையோர இறைச்சி மற்றும் அசைவ உணவு கடைகளை மூடத் தொடங்கிய சம்பவம், பேசுபொருளாகியிருக்கிறது.

இதுபற்றி தகவலறிந்த காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, கடைகளை மூடுவதைத் தடுத்தபோது, ஆச்சார்யா அவர்களிடம் சத்தம் போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெகுவாகப் பரவின. இந்த நிலையில், தான் ஏன் அவ்வாறு ஏன் அவ்வாறு செய்தேன் என ஆச்சார்யா விளக்கமளித்திருக்கிறார்.
இது குறித்து ஆச்சார்யா, “இறைச்சி மற்றும் அசைவ உணவகத்திலிருந்து புகை மற்றும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நகராட்சி நிர்வாகிகளிடம் பேசினேன். அப்போது, தொண்டை வலித்ததால் நான் சத்தமாகப் பேசினேன். என்னுடைய செயல் யாருக்கேனும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மேலும், எந்தவொரு குறிப்பிட்ட பிரிவினருக்காக இதைச் செய்யவில்லை. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின்படி நான் செயல்பட்டு வருகிறேன். அனைவரின் ஆதரவையும், நம்பிக்கையையும், அனைவரின் கூட்டு வளர்ச்சியையும் நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்தார். இருப்பினும், அந்தப் பகுதியில் இருக்கும் இறைச்சிக் கடைகளால் நோய் உண்டாவதால் ஆச்சார்யா அவ்வாறு செய்ததாகக் கூறப்பட்டாலும், அந்தப் பகுதியில் இஸ்லாமியர்கள்தான் அதிகம் கடை வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்த சம்பவத்தையடுத்து, சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம், “நகர விற்பனைக் குழு அமைத்து, விற்பனை மண்டலங்களை உருவாக்கி, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதுவரை, நகர விற்பனைக் குழு, வியாபாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கவில்லை. விற்பனையாளர்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை. விற்பனை மண்டலங்களும் அடையாளம் காணப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சாலையோர இறைச்சிக்கடைகள் மற்றும் அசைவ உணவாக வியாபாரிகளை மிரட்டுவது மிகுந்த கவலையளிக்கிறது” என அறிக்கை வெளியிட்டிருக்கிறது.