Doctor Vikatan: மழைநாள்களில் அதிகரிக்கும் சேற்றுப்புண்… குணப்படுத்த என்ன வழி?

Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே எனக்கு கால்களில் சேற்றுப்புண் அதிகமாகிவிடுகிறது. சமையலறையில் நின்று வேலை பார்க்க முடியவில்லை. இரவில் பெரும் அவஸ்தையாக இருக்கிறது. இந்தப் பிரச்னை அடிக்கடி வர என்னதான் காரணம்…. இதற்கு என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சருமநல மருத்துவர் பூர்ணிமா

சேற்றுப்புண் என்பது ஒருவகையான ஃபங்கல் இன்ஃபெக்ஷன்…. அதாவது பூஞ்சையால் ஏற்படும் தொற்று. இந்தத் தொற்று பாதிக்கும்போது கால் விரல்களுக்கு இடையில் கொப்புளங்கள் வருவது, சிவந்த செதில்கள் உருவாவது, அரிப்பு, எரிச்சல் போன்றவை இருக்கும். ஈரப்பதம் அதிகமுள்ள சூழலிலும், ஈரமான இடங்களில் நின்று வேலை செய்வதாலும் இந்தப் பிரச்னை தீவிரமாகும்.

அடிக்கடி சேற்றுப்புண் பிரச்னை வருகிறது என்றால் முதல் வேலையாக ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் இருப்பதையும், தண்ணீரில் நின்றபடி வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும்.  அது முடியாத பட்சத்தில் கைகளுக்கு கிளவுஸ், கால்களுக்கு ரப்பர் பூட்ஸ் போன்றவற்றை அணிந்துகொண்டு வேலை செய்ய வேண்டும். 

மாத்திரைகள்

பிரச்னை வந்துவிட்டால் தானாக குணமாகும் என அலட்சியப்படுத்தாமல் சரும மருத்துவரின் ஆலோசனையின் பேரில், ஆன்டி ஃபங்கல் க்ரீம், வாய்வழி எடுத்துக்கொள்ளக்கூடிய மாத்திரைகள் என முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.  

தொற்று முழுமையாக குணமாகும்வரை இந்த விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். உங்களுடைய உடைகள், காலணிகள், சாக்ஸ் போன்றவற்றை மற்றவருடன் பகிராமல் இருப்பதும் அவசியம். மேலும் இறுக்கமான காலணிகள்  அணிவதையும் தவிர்க்க வேண்டும். வெறுங்கால்களுடன் நடப்பதையும் தவிர்க்கவும். இந்தப் பிரச்னைக்கு சரும மருத்துவரை அணுகி முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். சுய மருத்துவம் உதவாது.  

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.