மிக்ஜாம் புயல் ஓய்ந்து சென்னை மெல்ல மீண்டு வருகிறது. இன்னும் சில பகுதிகளில் மழை நீர் முழுவதுமாக வெளியேறாத நிலையில், மீட்புப் பணிகளும், அரசு நிவாரணப் பணிகளும் நடந்து வருகிறது. இதற்கிடையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டும் வருகிறது. இதேபோன்று புழல், பூண்டி ஏரிகளிலும் நீர் வரத்தை பொறுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் உயர்த்தப்பட்டு\குறைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று அதை ஆய்வு செய்யச் சென்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “தற்போது நீர்வரத்து குறைந்ததன் காரணமாக நீர் வெளியேற்றப்படும் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதியே தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும், சென்னைக்குப் புறநகரில் ராமஞ்சேரி என்ற இடத்தில் புதிய ஏரியை உருவாக்க அரசு முயல்கிறது. சமீபத்தில் கூட முதலமைச்சர் ஸ்டாலினிடம் இது குறித்துப் பேசினேன். தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டும் என்பதற்காக புவியியல் அமைப்பு இல்லாமல், நினைத்த இடத்தில் புதிய ஏரியை உருவாக்க முடியாது” என்றார்.
அதற்கான ஆய்வுகள் செய்யப்படும். வெள்ள நிவாரணப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. அடையாற்றில் முறையாகத் தூர்வாரி சீரமைத்து வைத்ததால் கடந்த ஆண்டுகளைப் போல் அதிலிருந்து தண்ணீர் சாலைகளுக்கு வரவில்லை. இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கக் கூடும். நான் உட்பட யாராக இருந்தாலும் சரி நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்தால் தண்ணீருக்குக் கோபம் வந்துவிடும்” எனத் தெரிவித்திருக்கிறார்.