அம்மா ராதிகா, இயக்கம் மித்ரன் ஆர்.ஜவஹர் – பேன் இந்தியாவை விட்டு தமிழிலும் கவனம் செலுத்தும் மாதவன்!

தனுஷின் நடிப்பில் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் உருவான `திருச்சிற்றம்பலம்’ படம் வெளியாகி ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. அந்தப் படம் நடிகர் மாதவனை வெகுவாகக் கவர்ந்துவிட, படத்தைப் பார்த்த கையோடு மித்ரனுக்கும் போன் செய்து, “அப்படி ஒரு குடும்பக் கதை எனக்கும் வேண்டும்” என அன்புக்கட்டளை இட்டிருக்கிறார். அப்படி மாதவன், மித்ரன் ஜவஹர் கூட்டணி இணையும் படம் இப்போதுதான் டேக் ஆஃப் ஆகியிருக்கிறது.

மாதவன்

‘ராக்கெட்ரி’ படத்திற்குப் பிறகு, நடிப்பில் தனிமுத்திரைப் பதித்து வருகிறார் நடிகர் மாதவன். அவர் நடிப்பில் தற்போது இந்தியில் வெளியான ‘தி ரயில்வே மென்’ வெப்சிரீஸ் தனிக் கவனம் பெற்றுள்ளது. பல்லாயிரம் மக்களின் உயிரைக் காவு வாங்கிய ‘போபால் விஷ வாயு’ கசிவு குறித்துப் பேசும் அந்தத் தொடர், ஓ.டி.டி-யில் வெளியாகி வரவேற்பை அள்ளி வருகிறது. இது தவிர குஜராத்தி மொழி படமான ‘வாஷ்’ படத்தின் ரீமேக்கிலும், மஞ்சு வாரியருடன் ‘அம்கிரித் பண்டிட்’ என்ற இந்திப் படத்திலும் நடித்து முடித்துவிட்டார். அதன் ரிலீஸ் வேலைகள் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கின்றன.

ஒரு நேரத்தில் இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த மாதவன், தற்போது தமிழிலும் கவனம் செலுத்தி வருகிறார். தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் ‘டெஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷை வைத்து ‘ரகு தாத்தா’ என்ற படத்தை இயக்கி வரும் சுமன்குமார்தான் ‘டெஸ்ட்’ படத்தின் கதை, வசனத்தை எழுதியுள்ளார். மாதவனுடன் நயன்தாராவும், சித்தார்த்தும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இரண்டு ஷெட்யூல் சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. இதன் பின், ‘மதராச பட்டினம்’ விஜய்யின் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்து வரும் படத்திலும் கமிட்டாகி உள்ளார். அதன் படப்பிடிப்பும் சென்னையில் போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் அதன் படப்பிடிப்பிலும் இணைகிறார்.

‘தி ரயில்வே மென்’னில் மாதவன்

இந்நிலையில் மித்ரன் ஆர்.ஜவஹரின் படப்பிடிப்பும் சென்னையில் தொடங்கிவிட்டது. மாதவன் விரும்பியது போல, ஒரு கதை இது. மாதவனின் அம்மாவாக ராதிகா நடிக்கிறார். தமிழில் ‘மிரட்டல்’ படத்தில் அறிமுகமான ஷர்மிளா மன்ரே, இப்போது கன்னடத்தில் தயாரிப்பாளராகவும் மிளிர்கிறார். படத்தில் அவரும் இருக்கிறார். சென்னையின் மிக்ஜாம் புயல் சீறிப்பாய்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. மழை வெள்ளப் பாதிப்புகள் சரியான பின், மீண்டும் இதன் படப்பிடிப்பு தொடங்கும். ஸ்காட்லாந்திலும் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டு வருகிறார்கள்.

ஆக, இப்போது பேன் இந்தியா நடிகராக மாறிவிட்ட மாதவன், தமிழிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் என்பதுதான் ரசிகர்களுக்கான புதிய செய்தி!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.