புதுடெல்லி: மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா 2023 மீதான விவாதத்தில் ராமநாதபுரம் எம்.பி. கே.நவாஸ்கனி பேசியதாவது:
இந்த அவையில் எனது நண்பர் செந்தில்குமார் ஒரு வார்த்தையை தவறாகக் கூறியதாக எழுந்த பிரச்சினையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டார். இதற்காக திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினும் தங்கள்எம்.பி.யை கண்டித்தார். திமுக மக்களவை குழு தலைவரும் கண்டித்து, இந்த அவையில் அவரை வருத்தம் தெரிவிக்க கூறினார். இதை ஏற்று செந்திலும் வருத்தம் தெரிவித்தார். அதேவேளையில் கடந்த கூட்டத்தில் இந்த அவையில் நமது சக உறுப்பினர் தானிஷ் அலியும் பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தானிஷ் அலியைதீவிரவாதி என்பது உள்ளிட்ட கடும் வார்த்தைகளை பயன்படுத்தி, ஒட்டுமொத்த சிறுபான்மையினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ரமேஷ் பிதூரி பேசியிருந்தார். இதற்காக அவர் மீதுஇதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் வருத்தம் தெரிவிக்கவும் இல்லை.
இது, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதி, ஆளுங்கட்சிகளுக்கு ஒரு நீதியாக உள்ளது. ரமேஷ் பிதூரி மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை அறிய விரும்புகிறேன்” என்றார்.
எம்.பி. நவாஸ்கனி மேலும் பேசும்போது, “பாஜகவுக்கு எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு இல்லையோ அங்கெல்லாம் ஆளுநர்களின் மூலமாக ஆட்சி செய்ய துடிக்கிறது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் அந்த அரசுகளுக்கு இடையூறாக ஆளுநர்கள் செயல்படுகின்றனர். ஆளுநர்கள் மூலம் புறவாசல் வழியாக ஆட்சி நடத்த இந்த அரசு முயல்கிறது. இது ஒரு தவறான முன்னுதாரணம். இதனை கைவிட வேண்டும். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.
ரமேஷ் பிதூரி வருத்தம்: இந்நிலையில் பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி நேற்று மக்களவை உரிமைக்குழு முன்பு ஆஜரானார். அப்போது, பகுஜன்சமாஜ் எம்.பி. தானிஷ் அலிக்கு எதிராகஆட்சேபகரமான கருத்து தெரிவித்ததற்காக வருத்தம் தெரிவித்தார்.