புதுடில்லி, நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து, வடகிழக்கு மாநிலமான அசாமில், 1966 – 1971 காலகட்டத்தில் புலம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை தொடர்பான புள்ளி விபரங்களை தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்தின் 6ஏ பிரிவின்படி, அண்டை நாடுகளில் இருந்து, குறிப்பாக வங்கதேசத்தில் இருந்து வடகிழக்கு மாநிலமான அசாமுக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.
இதன்படி, 1966 ஜன., 1 முதல், 1971 மார்ச் 25ம் தேதி வரையில் புலம்பெயர்ந்து, அசாமில் வசிப்பவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், அசாமில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டத்தின், 6ஏ பிரிவை எதிர்த்து, 17 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமர்வு பிறப்பித்த உத்தரவு:
கடந்த 1966 ஜன., 1 முதல், 1971 மார்ச் 25ம் தேதி வரையில் அசாமுக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை தொடர்பான தகவல்களை, மத்திய அரசு வரும் 11ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பான தகவல்களை மாநில அரசு, மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்.
நம் நாட்டுக்குள், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களுக்குள், அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்வதை தடுக்க, என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தையும் தாக்கல் செய்யவேண்டும்.
வங்கதேசத்துடன் அதிக தொலைவுக்கு எல்லையை பகிர்ந்து கொள்ளும் மேற்கு வங்கத்தை, இந்த சட்டத்தில் சேர்க்காதது ஏன் என்பதையும் விளக்க வேண்டும்.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்