சபரிமலை:சபரிமலையில், 18 படிகளின் மேற்பகுதியில் தானியங்கி கூரை அமைக்கும் விவகாரத்தில், கேரள உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து அரசிடம் விளக்கம் கோரியுள்ளது.
சபரிமலையில் மிகவும் புனிதமாக கருதப்படுவது 18 படிகள். இருமுடி கட்டுடன் வருவோர் மட்டுமே இந்த படிகளில் ஏறிச் சென்று ஐயப்பனை வழிபட முடியும்.
படி பூஜை
மண்டல, மகர விளக்கு காலம் தவிர்த்து எல்லா மாத பூஜை நாட்களிலும் இந்த படிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இது, சபரிமலையில் மிக அதிக கட்டணம் உடைய வழிபாடாகும்.
மழை நேரத்தில் படி பூஜை செய்வதில் பல சிரமங்கள் இருப்பதை கருதி, படியின் மேற்பகுதியில் தானியங்கி கூரை அமைக்க, திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்தது. இதற்காக சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட கற்சுவர் சபரிமலை கோவிலின் அழகை கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கேரள உயர் நீதிமன்றம் இது தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, மாநில அரசிடம் விளக்கம் கேட்டது.
பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று மாநில அரசு கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, டிச., 19க்கு வழக்கு விசாரணை நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், ஜி.கிரீஷ் உத்தரவிட்டனர்.
உத்தரவு
இதுபோல சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கும்படி பத்தனம்திட்டை கலெக்டர் மற்றும் எஸ்.பி.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தற்போது வரும் பக்தர் கூட்டத்தில், 20 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்டோர் என்று தேவசம்போர்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
நிலக்கல்லில் பாஸ்டேக் மூலம் வாகன பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் போது மின்சாரம் தடை பட்டால் அது செயல்படாமல் இருப்பது பற்றி கவலை தெரிவித்த நீதிபதிகள் இதை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement