‘கே.ஜி.எப்’ படத்தின் மூலம் இந்திய சினிமாவையே தன் பக்கமும் கன்னட சினிமா பக்கமும் திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகர் யஷ்.
யஷ் நடிக்கும் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில் அவரின் 19 வது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தை கீது மோகன்தாஸ் என்ற மலையாள இயக்குநர் இயக்குகிறார். படத்திற்கு ‘டாக்ஸிக்’ (TOXIC) என்று பெயரிட்டுள்ளனர். கே.வி என் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் யஷிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யஷின் இந்த ‘டாக்ஸிக்’ (TOXIC) திரைப்படத்தை இயக்கவுள்ள கீது மோகன்தாஸ் `லையர்ஸ் டைஸ்’ மற்றும் 2019ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘மூத்தோன்’ என்ற படத்தையும் இயக்கி இருக்கிறார்.
மலையாளப் படங்களில் நடித்த இவர் 2004 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருதைப் பெற்றிருக்கிறார். முன்னணி நடிகையாக விளங்கிய இவர் இயக்குநராக அறிமுகமாகி பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

இவரது கணவர் ராஜீவ் ரவியும் மலையாள திரை உலகின் முன்னணி இயக்குநர்தான். இவர் தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் மாதவன் நடித்த ‘நள தமயந்தி’ படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.