'கடவுளின் கடும் கோபத்திற்கு இஸ்ரேல் ஆளாகும்' – துருக்கி நாடாளுமன்றத்தில் பேசி விட்டு மயங்கி விழுந்த எம்.பி.

அங்காரா,

துருக்கி நாட்டின் நாடாளுமன்றத்தில் ஹசன் பித்மெஜ் (வயது 53) என்ற எம்.பி., இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரில் துருக்கி அரசின் செயல்பாடுகளை விமர்சித்தபடி நேற்று பேசி கொண்டு இருந்துள்ளார்.

இந்த காட்சி நேரலையாக ஒளிபரப்பானது. அப்போது, அவர் அவையில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நீரிழிவு நோயால் அவர் பாதிக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது. துருக்கியை விமர்சிக்கும் வகையில் அவையில் பேசிய அவர், வரலாறு தொடர்ந்து அமைதியாக இருந்தாலும் கூட, உண்மை தொடர்ந்து அமைதியாக இருக்காது என்று காட்டத்துடன் கூறினார்.

இஸ்ரேலை பற்றி அவர் பேசும்போது, எங்களை நீக்கி விட்டால், எந்த பிரச்சனையும் இருக்காது என அவர்கள் நினைக்கிறார்கள். எனினும், எங்களை விலக்கி விட்டாலும், நீங்கள் செய்த தவறுக்கான துன்பத்தில் இருந்து விலகி விட முடியாது.

வரலாற்றின் துன்பத்தில் இருந்து நீங்கள் தப்பி விட்டாலும், கடவுளின் கோபத்தில் இருந்து நீங்கள் தப்ப முடியாது என்று பேசினார்.

துருக்கி சுகாதார மந்திரி பரெத்தீன் கோகா சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், தனது பேச்சின்போது பித்மெஜ் மிகுந்த குழப்பத்தில் காணப்பட்டார். அவரை மருத்துவ பணியாளர்கள் தீவிர கண்காணிப்புடன் கவனித்து வருகின்றனர் என உறுதி கூறியுள்ளார். இதுபற்றிய வீடியோ ஒன்றும் சமூக ஊடகத்தில் வெளிவந்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.