கேரளாவில் 140 சட்டமன்ற தொகுதிகளிலும் நவம்பர் 18 முதல் டிசம்பர் 24 வரை `நவ கேரளா சதஸ்’ என்ற பெயரில் அரசு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. இதில் முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் பங்குபெற்று, அரசின் சாதனைகளை ஒவ்வொரு தொகுதிகளிலும் விளக்கி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று இடுக்கி மாவட்டம் பீருமேடு சட்டமன்றத் தொகுதி பொதுக்கூட்டம், வண்டிப்பெரியாரில் வைத்து நடைபெற்றது.
இதில் பங்குபெற்றுப் பேசிய கேரள முதல்வர் பினாரயி விஜயன், சபரிமலை விவகாரம் குறித்து பேசினார்.
கேரள மாநிலம் சபரிமலையில் கடந்த சில நாள்களாக பெரும் கூட்ட நெரிசல் நிலவிவருகிறது. பக்தர்கள் தரிசனம் நடத்தப் பல மணிநேரம் வரிசையிலேயே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்களை ஒருங்கிணைப்பதில் குளறுபடிகள் உள்ளதாக பக்தர்கள் சிலர் தரிசனம் செய்யாமலே திரும்பும் நிலை ஏற்பட்டது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு போதுமான உணவு, போக்குவரத்து, கழிவறை என ஒரு வசதிகளும் சரியாகச் செய்யப்படவில்லை எனப் பல புகார் எழுந்தது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸார் கூட சரியாக இல்லை என்றும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கூட்ட நெரிசல் தாங்க முடியாமல் பல பக்தர்கள் சபரிமலை சந்நிதானம் செல்லாமலே வீடு திரும்பும் நிலை கூட ஏற்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸார் பக்தர்களின் வாகனங்களைப் பல மணிநேரம் வழியில் நிறுத்தி வைப்பதும் பக்தர்களிடையே எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. பம்பையில் போலீஸார் வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர் என் கூறி பக்தர்கள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இப்படிப் பல நிலையில் அவதிப்படுவதைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று காங்கிரஸ் எம்.பி-க்கள் மக்களவையில் சபரிமலை பிரச்னையைச் சுட்டிக்காட்டி போராட்டத்தை நடத்தினர்.
போராட்டத்தில் கேரள காங்கிரஸ் எம்.பி-க்கள் கூறியதாவது, “பல மாநிலங்களிலிருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு மாநில அரசோ, மத்திய அரசோ போதுமான எந்த வசதிகளும் செய்துகொடுக்கவில்லை. குழந்தைகள், முதியோர்கள் என பலர் பல மணிநேரம் வரிசைகளிலே நிற்க வேண்டிய அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் பல மாநிலங்களிலிருந்து சபரிமலை வரும் இந்த நேரத்தில் முதல்வரும் அமைச்சர்களும் “நவ கேரளா சதஸ்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் நடத்தி வருகின்றனர். இது முற்றிலும் தவறான நடைமுறை. சபரிமலையில் ஒரு நாள் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருக்கும் போலீஸாரின் எண்ணிக்கை வெறும் 650 பேர். ஆனால் முதல்வரின் நவ கேரளா சதஸ் பொதுக் கூட்டங்களுக்கு ஒரு நாள் 2500 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.”எனக் குற்றம் சாட்டினர்.
சபரிமலை பிரச்னை பற்றி காங்கிரஸ் MP க்கள் நடத்திய போராட்டத்தை நேற்று வண்டிப்பெரியாறில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பினாராயி விஜயன் விமர்சித்துப் பேசினார். அவர் கூறியதாவது, “சபரிமலையில் ஏதோ பெரிய பிரச்னைகள் நடப்பதாகக் காங்கிரஸ் தலைவர்களும் எம்.பி-க்களும் சில நாட்களாக கூறி வருகின்றனர். இதுமுற்றிலும் தவறானது, இப்படிப்பட்ட பிரசாரங்களின் மூலம் நமது அரசையும் கேரள மக்களையும் மற்ற மாநில மக்களிடையே தவறாகச் சித்தரிக்க அவர்கள் முயற்சி செய்கின்றனர்.
சபரிமலையில் எல்லா வருடமும் நெரிசல் ஏற்படுவது சாதாரணம் தான். அதைக் கட்டுப்படுத்த அரசு போதிய முன் ஏற்பாடுகளைச் சரியாகச் செய்துள்ளது. சபரிமலையிலுள்ள பிரச்னைகளைப் பற்றி இதுவரை இரண்டு முறை அறநிலையதுறை அமைச்சர் உட்பட அனைத்து அதிகாரிகளுடனும் நான் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளேன். இந்த கூட்டங்களின் அடிப்படையில் பக்தர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க போதிய வசதிகளை அரசு செய்துள்ளது. சபரிமலையில் சிறிய பிரச்னைகள் ஏற்பட்டால் கூட அதை ஊதி பெரிதாக்கி எதிர்க்கட்சியினர் அரசியல் செய்துவருகின்றனர். எதிர்க்கட்சியினரின் இந்த செயல்கள் பக்தர்களிடையே தேவையில்லாத பீதியைக் கிளப்புகிறது.
கடந்த நாள்களில் சபரிமலை கூட்ட நெரிசலில் 12 வயது சிறுமி இறந்தது துரதிருஷ்டவசமானது, அதில் நம் அனைவருக்கும் வருத்தம் உண்டு. மருத்துவ பரிசோதனையில் சிறிய வயது முதலே அந்த சிறுமிக்கு இருதய பிரச்னைகள் இருந்ததாகவும் அது தான் இறப்பிற்குக் காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்குக் கூட அரசு தான் காரணம் எனப் பழி கூறுவது மிகவும் தவறானது. நவ கேரளா சதஸ் பொதுக்கூட்டங்கள் வெற்றியடைவது எதிர்கட்சியினருக்கு பிடிக்கவில்லை அதனால் தான் பொய்களை அவர்கள் பரப்புகிறார்கள்” என தனது உரையில் கூறினார்.
பீருமேடு தொகுதியின் பொதுக்கூட்டத்திற்குப் பிறகு கோட்டயம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளின் கூட்டங்களுக்காக, பிரத்யேகமாகத் தயார் செய்திருந்த பேருந்தில் முதலமைச்சரும் அமைச்சர்களும் சென்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.