பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 2015-ல் சித்தராமையா முதல்வராக இருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதற்கு எதிர்ப்பு எழுந்ததால் முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் பிஹார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் மேலிடம் அனைத்து மாநிலங்களிலும் அத்தகைய கணக்கெடுப்பு நடத்தி அதன் விவரங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியது.
இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்படும் என அறிவித்தார். இதற்கு துணை முதல்வர்டி.கே.சிவகுமார் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் சாதிவாரி கணக்கெடுப்பு வெளியிடும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து விமர்சித்த பாஜகவினர், ‘‘டி.கே.சிவகுமாரின் நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் மேலிடம் வெளிப்படையாக விவாதிக்க தயாரா?’’ என கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே, ‘‘சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திஅதன்படி பின்தங்கிய சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இது தான் காங்கிரஸின் நிலைப்பாடு. அந்த விவகாரத்தில் கட்சிக்குள் இரட்டை நிலைப்பாடு இல்லை”என நேற்று பதிலளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் டி.கே.சிவகுமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘நான் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரானவன் இல்லை. அந்த கணக்கெடுப்பு அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும். கர்நாடகாவில் 2015-ல்எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரம் இப்போது சரியாகஇருக்குமா? நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன். நான்உறுப்பினராக இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையமே அந்த கணக்கெடுப்பை நடத்தியது. இதை வைத்து அரசியல் செய்வதைவிட, அந்த கணக்கெடுப்பு தற்போது துல்லியமாக இருக்குமா என யோசிக்க வேண்டும்”என விளக்கம் அளித்தார்.