தமிழகத்தில் இறுதி ஊர்வலங்களுக்கான விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், அமைதியான முறையில் இறுதி ஊர்வலங்களை நடத்துவது தொடர்பான விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசும், காவல் துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தில், கடலூர் மாவட்டம், பண்ருட்டியில், இறுதி ஊர்வலத்தின்போது சாலையில் வீசப்பட்ட மாலை, அந்த வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மென் பொறியாளரான ராஜ்கமல் என்பவர் அவரது தாயின் கண்முன்பே பலியானார். எனவே, தமிழகத்தில் இறுதி ஊர்வலங்களின்போது சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில், விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தாமல் இறுதி ஊர்வலங்களை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பான விதிகளை வகுப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக அரசும், காவல்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.