மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களில் முதல்வர்களை அறிவித்த பா.ஜ.க, நேற்று மாலை ராஜஸ்தான் மாநில முதல்வரையும் அறிவித்தது. கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும் நிலையில் முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பஜன்லால் சர்மா புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டார். பஜன்லால் சர்மா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல் மூன்று வரிசையில் கூட இருக்கவில்லை. அவர் பின்புறம் கடைசி வரிசையில் அமர்ந்து இருந்தார். முன் வரிசையில் இருந்த பலரும் முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். பஜன்லால் சர்மா முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்ததால், பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இன்றி கடைசி வரிசையில் இருந்தார்.

ஆனால் கட்சி தலைமை திடீரென பஜன்லால் சர்மாவை முதல்வராக நியமித்து இருக்கிறது. சட்டமன்றத்திற்கு சர்மா புதிது என்றாலும் கட்சிக்கு மிகவும் பழைமையானவர் தான் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். ராஜஸ்தான் பா.ஜ.க.வில் மூன்று முறை பொது செயலாளராக இருந்துள்ள சர்மா, கட்சியில் நீண்ட காலமாக இருக்கும் தலைவராக அறியப்படுகிறார். மாணவர் பருவத்தில் ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். மேலும் நீண்ட காலமாக டெல்லியுடன் நெருக்கமாக பயணித்து வந்தவர். பா.ஜ.க. தலைமை திட்டமிட்டே சர்மாவை மிகவும் பாதுகாப்பான தொகுதியில் போட்டியிட வைத்ததாக கட்சியில் உள்ள சிலர் குறிப்பிட்டனர்.
சர்மா போட்டியிட்டு வெற்றி பெற்ற சங்கனர் தொகுதி பா.ஜ.க.வின் கோட்டையாகும். அங்கு இதுவரை தேர்தல் நடந்த 10 முறையில் 8 முறை பா.ஜ.க.வே வெற்றி பெற்று இருக்கிறது. வென்ற அனைத்து தேர்தலிலும் இத்தொகுதியில் 50 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளை பா.ஜ.க.பெற்றது கிடையாது. அதேசமயம் கடினமாக உழைப்பவருக்கு கட்சி தலைமை இந்த பரிசை வழங்கி இருப்பதாக கருதப்படுகிறது. இது குறித்து சர்மாவின் மைத்துனர் பிரமோத் சர்மா கூறுகையில், ”கட்சியின் சாதாரண தொண்டனுக்கு கட்சி தலைமை மிகப்பெரிய பொறுப்பை வழங்கி இருக்கிறது. சாதாரண தொண்டனுக்கு இந்த அளவுக்கு உயர்ந்த பதவி கொடுப்பதுதான் பா.ஜ.க. சர்மா தனது பணியை பொறுப்புடன் செய்வார். நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.

ராஜஸ்தானில் 7 சதவீத வாக்குகளை கொண்ட சமூகத்தை சேர்ந்த பஜன்லால் சர்மா இப்பதவிக்கு வந்திருப்பது பலருக்கும் ஆச்சரியமாகவே அமைந்தது. அதேசமயம் மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் சமூக மக்களை கவனிக்காவிட்டால் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் இருக்கும் இரண்டு பெரிய சமூகங்களை சேர்ந்தவர்களை துணை முதல்வர்களாக்கி இருக்கின்றனர்.
ராஜஸ்தானில் ஆதிக்கம் செலுத்தும் ராஜ்புத் சமுதாயத்தை சேர்ந்த தியாகுமாரி மற்றும் பட்டியலினத்தை சேர்ந்த பிரேம் சந்த் ஆகியோர் துணை முதல்வர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தியாகுமாரி அரச குடும்பத்தை சேர்ந்தவர். எம்.பி.பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் இதற்கு முன்பு பல முறை முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்தார். இதற்காக டெல்லி சென்று கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசினார். அதோடு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தனது மகன் மூலம் வசுந்தரா ரிசார்ட்களில் பாதுகாப்பான முறையில் தங்க வைத்திருந்தார். ஆனால் அப்படி இருந்தும் அவரது எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது. வசுந்தரா மட்டுமல்லாது பல தலைவர்கள் தங்களுக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.