தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனிமுத்திரை பதித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். 2013-ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி, சினிமாவில் தனது பத்தாவது ஆண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கிலும் அசத்தி வரும் அவருக்கு இப்போது பாலிவுட் கதவு திறந்திருக்கிறது. ‘நடிகையர் திலகம்’ படத்திற்குப் பின் வித்தியாசமான படங்களில் நடித்துவருகிறார் கீர்த்தி. இப்போது கதாநாயகியை மையப்படுத்தும் கதைகளிலும் கவனம் செலுத்திவருகிறார். கீர்த்தி நடித்துவரும் படங்கள் ஒரு பார்வை.

தமிழில் ‘மாமன்னன்’, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’ படங்களுக்குப் பின், ஜெயம் ரவியுடன் ‘சைரன்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியிருக்கும் படமிது. ‘இரும்புத்திரை’, ‘விஸ்வாசம்’ படங்களின் ரைட்டராக அறியப்பட்டவர் இந்த இயக்குநர். இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் கீர்த்தி. இதுதவிர ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளிலும் தனிக் கவனம் செலுத்துகிறார். நயன்தாரா, த்ரிஷா எனப் பலருக்கும் ஹீரோயின் சென்ட்ரிக் கைகொடுக்காத நிலையில், கீர்த்தி சுரேஷ், ஆண்ட்ரியா என ஒருசிலர் மட்டுமே இந்த ஜானரில் கவனம் செலுத்திவருகின்றனர். அதிலும் அறிமுக இயக்குநர்களின் படங்களில் அதிக ஸ்கோர் எடுத்துவருவதால், இப்போது ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். இந்த வரிசையில்தான் அந்தப் படங்கள் ரிலீஸுக்கும் தயாராகி வருகின்றன.

மாதவன், சித்தார்த் இணைந்து நடித்துவரும் ‘டெஸ்ட்’ படத்தின் ரைட்டரான சுமன்குமார், ‘ரகு தாத்தா’வை இயக்கியிருக்கிறார். ”இதுல கீர்த்தியோட கதாபாத்திரம் ரொம்பவே வித்தியாசமானது. கொள்கைக்கும் ஆணாதிக்கத்திற்கும் நடுவே மாட்டிக்கிட்டு முழிக்கும் பெண்ணாக நடிப்பில் கலக்கியிருக்காங்க. படத்துல அவங்க பெயர் கயல்விழி. இதுல கல்லூரிப் பெண்ணாகவும், வேலைக்குச் செல்லும் பெண்ணாகவும் வர்றாங்க. இந்தப் படத்தோட கதை, ஒரு பெண் கொள்கைக்குக் கட்டுப்பட்டாகணும். இல்லன்னா, அவ ஆணாதிக்கத்திற்குக் கட்டுப்படணும். இப்படி ஒரு இக்கட்டான சூழல்ல இருக்கிற பெண்ணா, கீர்த்தி மிரளவச்சிருக்காங்க” என்கிறார் சுமன் குமார். இதன் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.
அதனை அடுத்து ‘ரிவால்வர் ரீட்டா’வில் நடித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகிவிட்டது. ஜெய் நடித்த ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தை இயக்கிய கே.சந்துரு, ‘ரிரீ’யை இயக்கி வருகிறார். பெரும்பான்மையான படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இன்னும் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு மீதம் இருக்கிறது. ஆக்ஷனில் அசத்த உள்ளார் கீர்த்தி என்கிறார்கள்.
அடுத்த ஹீரோயின் சென்ட்ரிக், ‘கண்ணி வெடி.’ அறிமுக இயக்குநர் கணேஷ்ராஜ் இயக்குகிறார். ‘டாணாக்காரன்’ படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். ‘டாணாக்காரன்’ மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் கீர்த்தியுடன் விஜே.ரக்ஷன், நமீதா கிருஷ்ணமூர்த்தி எனப் பலர் நடித்துவருகிறார்கள். இயக்குநர்கள் ராம், ஹரி இருவரின் பட்டறையில் இருந்து வந்தவர் இதன் இயக்குநர் கணேஷ்ராஜ்.

பாலிவுட்டில் ‘தெறி’ இந்தி ரீமேக்கில் வருண் தவான் ஜோடியாக கீர்த்தி அறிமுகமாக இருக்கிறார் எனத் சொல்லப்பட்ட நிலையில், இப்போது பாலிவுட் வெப்சிரீஸில் கால்பதிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. ராதிகா ஆப்தேவுடன் இணைகிறார். அந்த வெப் சீரியஸ் தமிழில் ‘அக்கா’ எனவும் வருகிறது. ஆக்ஷன் த்ரில்லரான இந்தத் தொடரை அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இயக்கி வருகிறார்.