இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக உதயன கிரிந்திகொட தெரிவு

இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உதயன கிரிந்திகொட அண்மையில் (11) தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான இத்தாலி தூதுவர் டாமியானோ ஃபிராங்கோவிக் இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டிருந்ததுடன், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இங்கு, இராஜாங்க அமைச்சர் கௌரவ அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வேலு குமார் மற்றும் கௌரவ பீ.வை.ஜீ. ரத்னசேகர ஆகியோர் நட்புறவுச் சங்கத்தின் உப தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹெக்டர் அப்புஹாமி செயலாளராகவும், கௌரவ மொஹமட் முஸம்மில் உதவிச் செயலாளராகவும், கௌரவ கருணாதாஸ கொடிதுவக்கு பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் மூலம் இலங்கை மற்றும் இத்தாலிக்கிடையில் காணப்படும் நீண்டகால தொடர்புகளை மேலும் விருத்தி செய்துகொள்ள முடியும் என இங்கு உரையாற்றிய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அத்துடன், GSP+ சலுகையை மீண்டும் பெறுவதற்கு 2017 இல் இலங்கைக்கு வழங்கிய ஆதரவு மற்றும் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதித் தடையை நீக்குவது தொடர்பில் இத்தாலி வழங்கிய ஆதரவுகளுக்கு சபாநாயகர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான இத்தாலி தூதுவர் டாமியானோ ஃபிராங்கோவிக் குறிப்பிடுகையில், இலங்கை மற்றும் இத்தாலிக்கிடையில் தற்பொழுது காணப்படும் வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை மேலும் விருத்தி செய்யும் வகையில் இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள இத்தாலியிலிருந்து புதிய முதலீட்டாளர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய இலங்கை – இத்தாலி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உதயன கிரிந்திகொட குறிப்பிடுகையில், நட்புறவுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்தார். மேலும், இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் விருத்தி செய்வதற்காக செயற்பட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.