மட்டக்களப்பு மாவட்டத்தில் “காலநிலைக்குச் சீரமைவான நீர்ப்பாசன விவசாய நிழ்ச்சித் திட்டம் (Climate Smart Irrigated Agriculture Project) “

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் “காலநிலைக்குச் சீரமைவான நீர்ப்பாசன விவசாய நிகழ்ச்சித் திட்டம் (Climate Smart Irrigated Agriculture Project)” தொடர்பான 7ஆவது மாவட்ட வழிகாட்டல் குழுவின் கலந்துரையாடல் நேற்று (13) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் காலநிலைக்குச் சீரமைவான நீர்ப்பாசன விவசாய வேலைத்திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான உதவித் திட்ட பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய, நீர்ப்பாசனத்துடனான உப உணவு உற்பத்தி, வீட்டுத் தோட்டம் போன்ற சிறு விவசாயத்தை ஊக்குவிக்கும் வேலைத்திட்டமாக மாவட்டத்தில் காணப்படும் வளங்களை மீளப் புனரமைப்பதுடன் விவசாயிகளை முன்னேற்றும் நிகழ்ச்சித் திட்டமாக இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

அதன்படி, மண்முனை மேற்கு வவுணதீவு மற்றும் ஏறாவூர் பற்று செங்கலடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 23 நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைக்கும் வேலைத்திட்டத்தில் இதுவரை 6 குளங்கள் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய குளங்களைப் திருத்தும் பணிகள் தொடர்வதாகவும் திட்டத்தின் பொறியிலாளர் சுஜிதரன் குறிப்பிட்டார் .

இதன்போது மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்ட எண்ணக்கருவை நிலை பேறாணதாக முன்னெடுப்பதற்கு ஏற்றவாறு குறித்த திட்டத்தின் கீழ் வந்தாறுமூலை, கரடியனாறு, ஆயித்தியமலை ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தியதாக மேற்கொள்ளப்படும் வீட்டுத் தோட்ட திட்டத்தை நிலைபேறான பொறிமுறையைப் பாதுகாப்பதற்காக நடைமுறைப்படுத்துமாறு மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ஆலேசனை வழங்கினார்.

அத்துடன் வீட்டுத் தோட்டத்திற்கான உள்ளீடுகளை வழங்கும் போது விவசாயத்தில் நிலைபேறாக ஈடுபடக் கூடிய மக்கள் குழுவைத் அடையாளம் கண்டு உணவுப் பாதுகாப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடியதாக செயற்படுத்துமாறும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பெரும் மற்றும் சிறு போக காலப் பகுதிகளில் உபஉணவுகளான கௌபி, நிலக்கடலை போன்ற உற்பத்திகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு அவசியமான இயந்திரங்கள், உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கான வசதிகளை இப்பகுதி மத்திய நிலையங்களுக்கு ஊடாக வழங்குதல், உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல், விவசாயம் மற்றும் சந்தைப்படுத்தல் வியாபாரம் தொடர்பாக விவசாய உற்பத்தி மத்திய நிலையங்களில் பயிற்சி வழங்கல் என்பன தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமார், மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வி. நவநீதன், நிகழ்ச்சித் திட்டத்தின் மாகாண உதவிப் பணிப்பாளர் ஆர். எம். ஆரியதாச, மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர்; பொறியியலாளரான யு. எல். ஏ. நாஸர், மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளரும் பொறியிலாளருமான வி. ராஜகோபாலசிங்கம், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், மாவட்ட நீர்ப்பாசனம், விவசாயம், வனவிலங்கு, வனவளப் பாதுகாப்பு மற்றும் தொல்பொருளியல் ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.