`தென்றல்’ தொடரின் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டவர் ஸ்ருதி ராஜ். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `தாலாட்டு’ தொடரில் சமீபத்தில் நடித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னத்திரை, வெள்ளித்திரை என கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சஞ்சீவ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `கிழக்கு வாசல்’ தொடர் முதலில் நடிப்பதற்கு அவர்தான் ஒப்பந்தம் ஆகியிருந்தார். பின்னர் சில காரணங்களால் அவர் வெளியேறியதாகக் கூறப்பட்டது. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `வானத்தைப் போல’ தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவரும், ஸ்ருதியும் இணைந்து புதுத்தொடர் ஒன்றில் நடிக்கவிருப்பதாகவும், அந்தத் தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்களான `செவ்வந்தி’, ‘மிஸ்டர் மனைவி’, `அன்பே வா’ ஆகிய மூன்று தொடர்களும் இறுதிக் கட்டத்தை நோக்கி செல்ல இருக்கிறது. இந்த மூன்று தொடர்களுக்கும் பெரிய அளவில் டிஆர்பி இல்லாததே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

`செவ்வந்தி’ தொடரில் நடிகை திவ்யா நடித்து வருகிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்னைகளை எதிர் கொண்டாலும் கர்ப்பமாகவே அந்தத் தொடரில் நடித்தார். அவருடைய குழந்தையுடனே தற்போது ஷூட்டிங்கிற்கும் சென்று வருகிறார். இதற்கிடையில் இந்தத் தொடர் முடிந்தால் தொடர்ந்து அவர் வேறொரு தொடரில் நடிக்க வேண்டும் என அவருடைய ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே போல, `மிஸ்டர் மனைவி’ தொடரின் மூலம் சன் டிவியில் என்ட்ரி கொடுத்த ஷபானாவும் இந்தத் தொடர் முடிவடைந்தாலும் சன் டிவியிலேயே வேறொரு தொடரில் நடிக்க வேண்டும் எனவும் அவர் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சஞ்சீவ், ஸ்ருதி ராஜ் நடிக்கும் தொடரில் நடிகை ரிந்தியாவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிந்தியா `திருமதி செல்வம்’ தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அந்தத் தொடருக்குப் பிறகு சின்னத்திரையில் பெரியதாக அவர் நடிக்கவில்லை. தற்போது புதியதாக வரவிருக்கும் இந்தத் தொடரின் மூலம் மீண்டும் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.