நாடாளுமன்ற அத்துமீறல்.. அவர்களிடம் அந்த பிளானும் இருந்தது: பரபரப்பு தகவல்

புதுடெல்லி:

டெல்லியில் நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற தாக்குதல் தினமான டிசம்பர் 13ம் தேதி, பலத்த பாதுகாப்பையும் மீறி இரண்டு நபர்கள் மக்களவைக்குள் நுழைந்தனர். பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த அவர்கள் இருவரும், தங்கள் காலணிகளில் மறைத்து வைத்திருந்த புகைக் குப்பிகளை எடுத்து வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியேறி அவை முழுவதும் பரவியது. அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மடக்கிப் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல், நாடாளுமன்றத்திற்கு வெளியே புகை குப்பிகளை வீசி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு ஆண், ஒரு பெண் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே நடந்த போராட்டம் தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது.

போலீஸ் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

குற்றவாளிகள் மக்களவைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தும் திட்டத்தை இறுதி செய்வதற்கு முன்பாக, பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வேறு சில வழிமுறைகளையும் ஆராய்ந்திருக்கிறார்கள்.

நெருப்பினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் ஜெல்லை உடல் முழுவதும் பூசிக்கொண்டு தீக்குளிப்பு போராட்டம் நடத்த முதலில் திட்டமிட்டுள்ளனர். பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டுள்ளனர். நாடாளுமன்றத்திற்குள் துண்டு பிரசுரங்களை கொடுப்பது தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனர். ஆனால், கடைசியில் அந்த திட்டத்தை கைவிட்டு, மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபடும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மக்களவைக்குள் நுழைந்தவர்களுக்கு பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா மூலம் பார்வையாளர் நுழைவுச் சீட்டு கிடைத்துள்ளது. இதனால் எம்.பி.யிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற முடிவு செய்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.