பெலகாவி, : ”விவசாயிகள் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய குறுகிய, நீண்ட கால கடன்களுக்கான வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது,” என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு நாளான நேற்று முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
நஞ்சுண்டப்பாவின் அறிக்கையை செயல்படுத்துவது, அது குறித்து ஆய்வு செய்ய தகுதியான பொருளாதார நிபுணர் தலைமையில் உயர் அதிகார குழு அமைக்கப்படும்.
இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 21 ஆண்டுகளாகிறது. அறிக்கையின்படி, வட கர்நாடகா மற்றும் கல்யாண் கர்நாடகா பகுதி வளர்ச்சி வாரியங்களுக்கு இதுவரை 61,330 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. இதில், 42,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
நஞ்சுண்டப்பாவின் அறிக்கை படி, சிறப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 32,433.43 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இருந்தபோதும், எதிர்பார்த்த அளவுக்கு முன்னேறவில்லை. கல்வி, சுகாதாரம், வருமானம் போன்றவற்றில் இம்மாவட்டங்கள் பின்தங்கி உள்ளன.
எனவே, நஞ்சுண்டப்பாவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது, அதன் முடிவுகளை ஆய்வு செய்ய பொருளாதார நிபுணர் தலைமையில் உயர் அதிகார குழு அமைக்கப்படும்.
வட்டி தள்ளுபடி
கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் வாங்கிய குறுகிய, நீண்ட கால கடன்களுக்கான முழு வட்டியை தள்ளுபடி செய்ய, காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், இதை ரத்து செய்வதாக, தேர்தல் அறிக்கையில் நாங்கள் குறிப்பிடவில்லை.
முந்தைய பா.ஜ., அரசு, 2018 தேர்தல் அறிக்கையில், ‘தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் 1 லட்சம் ரூபாய் வரையிலான பயிர் கடன்களை எங்கள் அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் தள்ளுபடி செய்யும்’ என்று கூறியிருந்தது.
ஆனால், பா.ஜ., செய்ததா. 1 பைசா கூட விடுவிக்கப்படவில்லை. 2019 ஆகஸ்டில் கர்நாடகாவில் கன மழை பெய்தபோது, வெள்ள பாதிப்புகளை எடியூரப்பா பார்வையிட்டார். ஷிவமொகாவில் அவர் கூறும்போது, ‘கேட்ட அளவுக்கு பணம் கொடுக்க, அரசிடம் பணம் அச்சடிக்கும் இயந்திரம் இல்லை’ என்று கூறினார்.
ஏற்கனவே 2008 ல் எடியூரப்பா, சட்ட மேலவையில் காங்கிரசின் எதிர்க்கட்சி தலைவர் உக்ரப்பா கேள்வி கேட்ட போது, இதையே கூறினார்.
விவசாயிகள் பயிர் கடனை ரத்து செய்வதாக, தேர்தலின் போது, நான் வாக்குறுதி அளித்திருந்தேன். இப்போது அது முடியாது என்பது புரிந்து விட்டது.
கடனை ரத்து செய்ய பணம் எங்குள்ளது; விவசாயிகள் கடனை ரத்து செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஆனால், மாநில கருவூலத்தில் பணம் இல்லை. எனவே, என்னால் கடனை ரத்து செய்ய முடியாது.
விண்வெளி தொழில்
பெலகாவியில் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்காவும், 500 ஏக்கர் பரப்பளவில் உலோக வார்ப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கப்படும். இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படும். மாவட்டத்தில் விண்வெளி சார்ந்த தொழில்களின் வளர்ச்சிக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தார்வாடில் தொழிற்சாலை தொகுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 19 நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இதன் மூலம், 2,450 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், 3,000 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
ராய்ச்சூரில் பருத்தி உற்பத்தி அதிகமாக உள்ளது. இம்மாவட்டத்தில் பொருளாதார மேம்பாடு மற்றும் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, பருத்தி சார்ந்த தொழில்களுக்கு, சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
விஜயபுராவில் 1,500 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி குழுமம் அமைக்கப்படும்.
வட கர்நாடகா பகுதி ஆடம்பரமான சுற்றுலா தலமாகும். இங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால், அதற்கு போதிய முக்கியத்துவம் கொடுக்காமல், பின்னடைவை சந்தித்து வருகிறது. நாங்கள் இவ்விஷயத்தில் தீவிரமாக எடுத்து கொண்டு, சுற்றுலாவை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பை உருவாக்கவும் விரிவான செயல் திட்டத்தை உருவாக்குவோம்.
தார்வாடில் உள்ள வால்மீகி எனும் நீர் மற்றும் மண் மேலாண்மை நிறுவனம் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
குளிர்கால கூட்டத்தொடரின் நிறைவு நாளில் பேசிய முதல்வர் சித்தராமையா.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்