பெலகாவி : காங்கிரஸ் தலைவர்கள் ஏற்பாடு செய்த விருந்தில்
பங்கேற்று, கட்சி கட்டுப்பாட்டை மீறிய எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ்
அனுப்ப, பா.ஜ., மேலிடம் ஆலோசிக்கிறது. ஆனால் இவர்கள் முன்னாள் முதல்வர்
எடியூரப்பாவுக்கு, நெருக்கமானவர்கள் என்பதால், என்ன செய்வது தெரியாமல் கையை
பிசைகிறது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தற்போது லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஆனால் பல தொகுதிகளில், வேட்பாளர்கள் கிடைக்காமல் திண்டாடுகிறது. எனவே அந்தந்த தொகுதிகளில் செல்வாக்குள்ள, பா.ஜ., – ம.ஜ.த., தலைவர்களை ஈர்க்க, மாநில காங்கிரஸ் தலைவருமான, துணை முதல்வர் சிவகுமார் முயற்சிக்கிறார்.
தலைவர்களுக்கு வலை
பா.ஜ.,வின் அதிருப்தி தலைவர்களுக்கு வலை விரித்துள்ளார். முன்னாள் அமைச்சர் சோமண்ணாவை, காங்கிரசுக்கு அழைத்து வந்து, துமகூரு தொகுதியில் களமிறக்க முயற்சி நடக்கிறது.
சட்டசபை தேர்தலில், பா.ஜ., தோற்ற பின் கட்சியை கண்டு கொள்ளாமல் ஒதுங்கும், எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம் ஹெப்பார் உட்பட, சில தலைவர்களின் பார்வை, காங்கிரஸ் மீது பதிந்துள்ளது. அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், அந்த கட்சிக்கு தாவ ஆலோசிக்கின்றனர். தலைவர்களுடன் தொடர்பில் உள்ளனர்.
சமீப நாட்களாக பா.ஜ., தலைவர்களை, சோமசேகர் விமர்சிக்கிறார். பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நடந்த சட்டசபை கூட்டத்தில், அரசை கண்டித்து பா.ஜ., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த போது, சோமசேகர் மட்டும் தன் இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.
பெலகாவி புறநகரில், சொகுசு விடுதி ஒன்றில், இரண்டு நாட்களுக்கு முன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு விருந்துக்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் யஷ்வந்த்பூர் தொகுதியின் சோமசேகர், எல்லாபுரா தொகுதியின் சிவராம் ஹெப்பார், எம்.எல்.சி., விஸ்வநாத் பங்கேற்றனர். இது ஊடகங்களில் வெளியானது. சட்டசபை நடக்கும் போது, இவர்களின் செயல் பா.ஜ.,வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
ஒழுங்கு நடவடிக்கை
எனவே, காங்கிரஸ் அளித்த விருந்துக்கு சென்றதற்கு, விளக்கம் கேட்டு மூவருக்கும் நோட்டீஸ் அளிக்க, பா.ஜ., மேலிடம் ஆலோசிக்கிறது. நோட்டீசுக்கு பதில் வராவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தயாராவதாக கூறப்படுகிறது.
இது குறித்து, ஊடகத்தினர் கேள்விக்கு, ‘எங்களை விருந்துக்கு வரும்படி, துணை முதல்வர் சிவகுமார் அழைப்பு விடுத்திருந்தார். எனவே நாங்கள் சென்றோம்’ என, சோமசேகரும், சிவராம் ஹெப்பாரும் பதிலளித்திருந்தனர். ஆனால் விஸ்வநாத் வாய் திறக்கவில்லை.
இத்தகைய செயலை, முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், வரும் நாட்களில் இவர்களின் வழியை, மற்றவர்களும் பின் பற்றக்கூடும். ஒழுங்கின்றி நடப்பர். எனவே அதிருப்தி நடவடிக்கைக்கு, இப்போதே முற்றுப்புள்ளி வைக்க, பா.ஜ., முயற்சிக்கிறது.
இதற்கிடையில் ஒழுங்கின்றி நடந்து கொண்ட, மூவரையும் கட்சியில் இருந்து நீக்கும்படி, சில எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ., மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். ‘ஆப்பரேஷன் தாமரை நடப்பதாக, வதந்தி பரப்பும் காங்கிரஸ் தலைவர்களுடன், இம்மூவரும் கைகோர்த்துள்ளனர். பதவி கொடுத்த கட்சிக்கே துரோகம் செய்கின்றனர். இவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும்’ என, பிடிவாதம் பிடிக்கின்றனர்.
ஆனால் விருந்துக்கு சென்ற மூவரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மாநில தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவர் அசோக்குக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இதனால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாமல், பா.ஜ., மேலிடம் கையை பிசைகிறது.
இதை உறுதி செய்வதை போன்று, சோமசேகர், ‘என்னை பா.ஜ.,வில் இருந்து விலக்க, சிலர் முயற்சிக்கின்றனர். என்னை பொறுத்தவரை எடியூரப்பாவே, எங்களுக்கு மேலிடம்’ என கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு, மூன்று மாதங்களுக்கு முன், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய, சோமசேகர், சிவராம் ஹெப்பார் தயாராகின்றனர். தங்களுக்கு பா.ஜ.,வில் அநியாயம் நடந்துள்ளதாக கூறி, வாக்காளர்களிடம் அனுதாபம் தேட முற்படுவதாக, தகவல் கிடைத்துள்ளது.
பா.ஜ.,வின் நிரந்தர அதிருப்தி தலைவர் என்றே அழைக்கப்படும் எம்.எல்.சி., விஸ்வநாத், மைசூரு லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் சீட் தருவதாக உறுதியளித்தால், எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்வதாக, காங்கிரஸ் தலைவர்களிடம் கூறியதாக தெரிகிறது.
அதே நேரம், ‘விஸ்வநாத் பா.ஜ.,வை விட்டு சென்றால் செல்லட்டும். மற்ற இருவரை தக்க வைக்க வேண்டும்’ என, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்