“ஆட்சியாளர்கள் சொல்லும் உண்மையான டிஜிட்டல் இந்தியா என்பது இதுதான். வளர்ச்சியின் பெயரால் காவு கொடுக்கப்பட்ட இந்தியா இது. வெறும் பக்கெட்டுகளையும், பேப்பர்களையும் கொண்டு எண்ணெய்க் கழிவுகளைச் சுத்திகரிக்க எத்தனிக்கும் புதுமை இந்தியா இது” என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
எண்ணெய் நிறுவனக் கழிவுகளால் எண்ணூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்டார் கமல்ஹாசன். மீனவர்களுடன் கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்ற அவர், “இந்த மோசமான பாதிப்புகளுக்கு எண்ணெய் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

‘இதுவல்ல வளர்ச்சி’
கமலுடன் விகடன் குழுவும் படகில் சென்றது. அப்போது விகடனுக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில், “இதற்கு முழுக்க முழுக்கக் காரணம் எண்ணெய் நிறுவனத்தின் லாப வெறிதான். இயற்கை, இங்கு வசிக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் என எதுவும் அவர்கள் கணக்கில் இல்லை. அவர்கள் கணக்கிடுவது பணத்தை மட்டும்தான். நான் விஞ்ஞானத்திற்கு எதிரானவன் இல்லை. விஞ்ஞானம் தேவைதான், வளர்ச்சி தேவைதான். ஆனால், அது அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஒரு சாரார் தேவைக்காக ஒரு சமூகத்தையே காவு கொடுப்பது எப்படி வளர்ச்சி ஆகும்?
இந்த பாதிப்பானது ஆழ்வார்பேட்டையிலோ அல்லது மயிலாப்பூரிலோ நடந்திருந்தால் இவர்கள் இப்படி மெளனமாக இருப்பார்களா?
ஊரின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறார்கள், ஒடுக்கப்பட்டு இருக்கிறார்கள், அதிகாரமற்று இருக்கிறார்கள், சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கிறார்கள் என்ற நிறுவனத்தின் அகங்காரம் மட்டுமே இதற்குக் காரணம். இவர்கள் எப்போதும் இப்படியே இருந்துவிடமாட்டார்கள் என்பதை, அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

‘லாபம்.. லாபம்… லாபம் மட்டுமே’
தொடர்ந்து பேசியவர், “ஒரு நிறுவனத்தின் லாப வெறி போபாலில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றது. ஒரு நிறுவனத்தின் லாப வெறி கொடைக்கானலை முடம் ஆக்கியது. இங்கு ஒரு நிறுவனத்தின் லாப வெறி ஒரு நதியையே கொன்றுள்ளது. வாழும் பூவுலகை ஊனமாக்கிவிட்டு, இந்த லாபத்தை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்… எண்ணெய் நிறுவனம் இதற்குப் பதில் அளிக்க வேண்டும். இதற்கான பரிகாரத்தைச் செய்ய வேண்டும். அரசு இதில் சம்பந்தப்பட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனித உயிர்கள் இங்கு மலினமாகக் கிடக்கின்றன. அதனால்தான் அபாயமான நிறுவனங்களை இங்கு நிறுவுகிறார்கள். இப்போதும் இந்த பொதுச் சமூகம் வாய் திறக்கவில்லை என்றால், இன்று எண்ணூர்… நாளை உங்கள் ஊராகவும் இருக்கலாம்” என்றார் காட்டமாக.