தமிழகம் மற்றும் காசியின் பிணைப்பின் சிறப்பு பற்றி பேசிய பிரதமர் மோடி

வாரணாசி,

உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் நமோ கட் பகுதியில், காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில், மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய மீன்வள துறை இணை மந்திரி எல். முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மற்றும் வாரணாசி இடையேயான காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்து உள்ளார். அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வழியே புதிய தொழில்நுட்ப பயன்பாடு இன்று நடைபெறுகிறது.

இது ஒரு புதிய தொடக்கம். இதனால், உங்களை என்னால் எளிதில் அடைய முடிகிறது என்று அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், பிரதமரின் பேச்சானது, அதனை கேட்க கூடிய, தமிழை புரிந்து கொள்ளும் பார்வையாளர்களுக்காக, பாஷினி வழியே செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தமிழ் மொழிபெயர்ப்பு ஆனது அவர்களை சென்றடையும்.

தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, விருந்தினர்கள் என்றளவில் இல்லாமல், நீங்கள் அனைவரும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என்றளவில் வந்திருக்கின்றீர்கள். காசி தமிழ் சங்கமத்திற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.

தமிழகத்தில் இருந்து காசிக்கு வருவது என்றால் அதற்கு, மகாதேவரின் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு வருவது என பொருள். அதனாலேயே, தமிழகம் மற்றும் காசிக்கு இடையேயான பிணைப்பு என்பது சிறப்பானது என்று அவர் பேசியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.