டெல்லி இந்தர்லோக் நிலையத்தில், மெட்ரோ ரயிலில் ஆடைகள் சிக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
35 வயதான ரீனா என்ற பெண், கடந்த வியாழக்கிழமை மெட்ரோ ரயிலில் ஏற முற்பட்டபோது, அதன் கதவுகள் மூடப்பட்டதால், அவரது ஆடைகள் ரயிலில் சிக்கி, சிறிது தூரம் பிளாட்பாரத்தில் இழுத்துச் செல்லப்பட்டுக் கடும் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிர்ழந்தார்.

இது குறித்து டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி அனுஜ் தயாள் கூறுகையில், “வியாழன் அன்று இந்தர்லோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு பெண் பயணியின் ஆடைகள் ரயில் சிக்கியதில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொள்வார்” என்று தெரிவித்தார்.
மேற்கு டெல்லியிலுள்ள நங்லோயில் இருந்து மோகன் நகருக்குச் செல்லும்போது இந்த விபத்து நடந்துள்ளது. ஆபத்தான நிலையில் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், நேற்று இறந்துவிட்டார். அவரின் கணவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், தன் மகளுடன் அவர் வாழ்ந்து வந்ததாகவும், ரீனாவின் உறவினர் விக்கி என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.