'கைக்கு எட்டியது… வாய்க்கு எட்டல…' ரூ.6,000 வெள்ள நிவாரணம்… அலைக்கழிக்கப்படும் சென்னை மக்கள்!

மிக்ஜாம் மழைவெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டைவிட்ட தமிழக அரசு, மக்களின் கோபத்தைச் சமாளிக்க… குடும்பத்துக்கு ஆறாயிரம் ரூபாய் நிவாரணம் என்கிற அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், இந்த நிவாரணத்திலும் ஏகப்பட்ட குழப்பங்கள், சந்தேகங்கள், கேள்விகள் என்று மக்களை அலையவிட்டுக் கொண்டிருப்பதுதான் கொடுமை.
கடந்த ஞாயிறன்று, நிவாரணத்தொகை வழங்க ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ‘எனக்கு எந்த ரேஷன் கடையில பணம் கொடுக்கிறாங்க…?’, ‘அப்ளிகேஷன் இன்னிக்கு கொடுப்பாங்களா?’, ‘வெளியூர்காரனான எனக்கு ரேஷன் கார்டு கிடையாது. நான் காஸ் கனெக்ஷன் பில் கொடுத்தா போதுமா?’ இப்படி ஏகப்பட்ட கேள்விகளுடன் மக்கள் ரேஷன் கடைகளைச் சுற்றிச் சுற்றி வந்தது, வெள்ளத்தில் மூழ்கிய அவஸ்தையைவிட பேரவஸ்தை!

மிக்ஜாம் புயல் நிவாரணம்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களின் சில வட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு ரூ.6,000 நிவாரண தொகையாக வழங்க ஆரம்பித்துள்ளது தமிழக அரசு. ‘வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட/ 2 நாள்களுக்கும் மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள்/பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் இழந்த குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக டோக்கன் முறையைப் பின்பற்றி ரூ.6000 வழங்கப்படும். மத்திய, மாநில அரசு / மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமானவரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய பாதிப்பு விவரங்களை, வங்கிக் கணக்கு விவரத்துடன், சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலமாக விண்ணப்பிக்கலாம். அவை பரிசீலிக்கப்பட்டு உரிய நிவாரணம் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

கரன்ஸியாக கையில் கொடுத்தால்தான் பயன்!

இந்த அறிவிப்பு வெளியானதும், ‘2015-ல் ஜெயலலிதா ஆட்சியில் வழங்கியதைப் போல வங்கிக் கணக்கு மூலமாக வழங்க வேண்டும்‘ என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையெல்லாம் தி.மு.க அரசு கண்டுகொள்ளவில்லை.  இதற்கு, ‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகக் கையில் பணத்தைக் கொடுத்தால்தான் பயன்கொடுக்கும்’ என்று நியாயமானதொரு காரணத்தை நீதிமன்றத்திலேயே முன்வைத்து, நிவாரணத் தொகையை வழங்க ஆரம்பித்துவிட்டது.

இப்படியொரு நியாயமான காரணத்தை முன்வைத்த அரசு, பெரும்பாலானவர்களுக்கு உடனடியாக பணத்தைக் கொடுக்காமல், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், பரிசிலித்து ஒரு வாரத்துக்குள் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பப்படும்’ என்று சொல்லி, ஒவ்வொரு ரேஷன் கடை முன்பாகவும் மணிக்கணக்கில் க்யூவில் நிற்க வைத்துவிட்டது.

மிக்ஜாம் புயல் நிவாரணம்

இதில் கொடுமை என்னவென்றால், உடனடியாக பணம் வழங்கத் தகுதியானவர்கள் என்று டோக்கன் கொடுக்கப்பட்டவர்கள் மிகமிகச் சொற்பமே. அதைவிட பற்பல மடங்கு மக்கள், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்துகொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதிலும், ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் நூறு, நூற்றைம்பது விண்ணப்பங்களே கொடுக்கப்பட்ட நிலையில், மற்றவர்களுக்கு நாளை என்று கைவிரித்துவிட்டனர். கால்கடுக்க க்யூவில் நின்ற பலரும் சபித்தபடியே வீட்டுக்குத் திரும்பினார்கள்.

வெளியூர் வேதனை!

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுப்பதிலும் ஏகக்குழப்பங்கள். சென்னையில் ரேஷன் அட்டை இல்லாமல் வசித்துவரும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நிலை கேள்விக்குறியானது. பெருமழையால் அவர்களும் பெரிய பாதிப்புகளைச் சந்தித்திருந்த போதிலும் அவர்களுக்கான நிவராணம் பற்றிய அறிவிப்பு வராதது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து, “சென்னையில் குடும்ப அட்டை இல்லையென்றாலும் பரவாயில்லை. சென்னையில் வசிப்பதற்கான ஆதாரமாக காஸ் பில் (எரிவாயு இணைப்பு), வீட்டு வாடகை ஒப்பந்தம் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். ஆய்வு செய்து நிவாரணம் வழங்க பரிந்துரைக்கப்படும்“ என்று வாய்மொழியாக அறிவிப்புக் கொடுக்கப்பட்டது.

மிக்ஜாம் புயல் நிவாரணம்

‘’ரேஷன் அட்டை இருந்தால், பாதிப்பே இல்லையென்றாலும் உடனடியாக பணப் பட்டுவாடா செய்துவிடுகிறார்கள். ரேஷன் கார்டு இல்லை என்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும் விண்ணப்பம் செய்து காத்திருக்க வேண்டும். அதுவும் வருமா… வராதா… தெரியாது. என்ன நியாயம் இது?’’ என்று கொதித்தார்கள் பாதிக்கப்பட்ட மக்கள். சரி, தலையெழுத்தே என்று காஸ் பில், வாடகை ஒப்பந்தப் பத்திரம் போன்ற ஆவணங்களோடு சென்றவர்களுக்கு பல பகுதிகளில் விண்ணப்பம் வழங்கப்படவில்லை. ‘’உங்கள் ஆதார் அட்டையில் இந்தப் பகுதியின் முகவரி இருந்தால்தான் விண்ணப்பம் கொடுக்க முடியும்“ என்று புதிதுபுதிதாக விதிமுறைகளைச் சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள். சில ரேஷன் கடைகளில், “வெளியூர்காரங்களுக்கெல்லாம் அப்ளிகேஷன் கிடையாது” என்று ஒரே வரியில் துரத்திவிட்டார்கள்.

இவங்க லாஜிக்கே புரியல!

இதுகுறித்து நம்மிடம் பேசிய கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அருண், “இவங்க சொல்ற ரூல்ஸெல்லாம் ரொம்ப அநியாயமா இருக்கு சார். நாங்க இங்கே நாலு வருஷமா குடியிருக்கிறோம். இந்த மழை வெள்ளத்துல கடுமையா பாதிக்கப்பட்டிருக்கோம். ரேஷன் கார்டு, ஆதார் கார்டெல்லாம் சொந்த ஊரான தஞ்சாவூர் அட்ரெஸ்லயே இருக்கு. இங்க குடியிருக்கிறதுக்கான ஆதாரமா காஸ் பில்லும் வாடகை ஒப்பந்த பத்திரமும் இருக்கு. இதைக் கொடுத்தாலே பல இடங்கள்ல அப்ளிகேஷன் கொடுக்கிறாங்க. ஆனா, எங்க ஏரியாவுல ரேஷன் கடையில உங்க ஆதார் கார்டுல இந்த அட்ரெஸ் இருந்தாதான் அப்ளிகேஷன் கொடுப்போம்னு சொல்லிட்டாங்க.

இவங்களோட லாஜிக் புரியவே இல்ல. கேட்டா… ‘வாடகை ஒப்பந்த பத்திரம் ஹவுஸ் ஓனர் கொடுக்கிறது. இப்போகூட புதுசா ஒப்பந்தம் ரெடி பண்ணிக் கொடுக்க வாய்ப்பிருக்கு. அதனால ஏத்துக்க முடியாது’னு சொல்றாங்க. சரி, அதைவிடுங்க காஸ் பில் இருக்கே… அதையுமா நம்ப மாட்டீங்களானு கேட்டா… எங்களுக்கு கொடுக்கப்பட்ட இன்ஸ்ட்ரக்‌ஷன்ல அதெல்லாம் சொல்லலைன்னு அசால்ட்டா பதில் சொல்றாங்க. ஒரு கட்டத்துக்குமேல அவங்ககிட்ட பேசவே முடியலை” என்றார் வெறுப்பாக.

மிக்ஜாம் புயல் நிவாரணம்

அதேசமயம், பல பகுதிகளில் காஸ் பில், வாடகை ஒப்பந்தப் பத்திரம் ஆகியவற்றுடன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டதையும் பார்க்க முடிந்தது. இதைப் பற்றி பேசிய மாங்காடு, பட்டூர் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி, ”எங்க பகுதியில வாடகை ஒப்பந்தம், காஸ் கனெக்ஷன் இப்படி ஏதாவது ஒரு ஆவணம் இருந்தா போதும். அதைக் கொடுத்தாலே அப்ளிகேஷனை வாங்கிக்கிட்டாங்க. கண்டிப்பா பரிசீலனை பண்ணி பணத்தை பேங்க்ல போட்டுடுவோம்னு சொன்னாங்க” என்று நம்பிக்கையோடு சொன்னார்.

”ஆதார் தேவை என்று நிபந்தனை விதிக்கவில்லை”

சரி உண்மை நிலவரம்தான் என்ன? சென்னையில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு விண்ணப்பம் வழங்குவார்களா… வழங்க மாட்டார்களா? என்று தெரிந்துகொள்வதற்காக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் மருத்துவர் கோபாலிடம் பேசினோம். அவர் நம்மிடம், ‘’உங்கள் ஆதார் கார்டில் சென்னை முகவரி இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. ஆனால், காஸ் பில், வாடகை ஒப்பந்த பத்திரம் இருந்தால்போதும். ஆதார் முகவரி தேவை என்று நாங்கள் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. இதுதொடர்பாக ” என்று சொன்னார். (இந்த விஷயத்தை நிவாரணப் பணிக்காக களத்தில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக எடுத்துச் சொல்லுங்கள். மக்களைக் குழப்ப வேண்டாம் என்றும் எடுத்துச் சொல்லுங்கள்’ என்று அவரிடம் கேட்டுக்கொண்டோம்.)

வருமானவரி கட்டாதவர்களும்.. க்யூவில்!

இதெல்லாம் ஒருபுறமிருக்க… ‘மத்திய, மாநில அரசு/ மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமானவரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய பாதிப்பு விவரங்களை, வங்கிக் கணக்கு விவரத்துடன், சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலமாக விண்ணப்பித்து நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்’ என்றுதான் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசாங்கத்தில் கடைநிலை ஊழியர்களாக இருப்பவர்களும் விண்ணப்பத்துக்காக க்யூவில் நின்றது கொடுமை.

மிக்ஜாம் புயல் நிவாரணம்

கோயம்பேடு பகுதி ரேஷன் கடையொன்றில் நீண்டிருந்த க்யூவில் நின்ற ஒரு பெண், ”நான் கார்ப்பரேஷன்ல வேலை பாக்கறேன்ங்க. சாதாரண கிளர்க். அரசாங்க உயர் அதிகாரிகள்தான் பாதிப்பு குறித்து அப்ளிகேஷன் கொடுக்கணும்னு அரசாணையில சொல்லியிருக்கு. ஆனா, என்னையும் அப்ளிகேஷன் கொடுக்கச் சொல்லிட்டாங்க” என்று வருத்தத்துடன் சொன்னார். அவருக்கு முன்பாக நின்றிருந்த ராஜன் என்கிற பெரியவர், ”நான் கெவர்மென்ட் ஊழியர் கிடையாது. வருமானவரி கட்டுற அளவுக்கு வருமானம் உள்ள ஆளும் கிடையாது. என்னோடது அரிசி கார்டுதான். இருந்தும் எனக்கு கையில பணம் கொடுக்கல. நீங்களும் விண்ணப்பம் கொடுங்க. பரிசீலனை பண்ணி பணம் கொடுப்பாங்கனு சொல்லிட்டாங்க. 70 வயசான என்னை, காரணமே இல்லாம க்யூவுல நிக்க வெச்சிட்டாங்க” என்று குமுறினார்.

இப்போதுதான் என்றில்லை. எப்போதுமே… நிவாரணம், பொங்கல்பரிசு என்று எதுவாக இருந்தாலும் மக்களை அலைக்கழிப்பதையே அரசுகள் வாடிக்கையாக வைத்துள்ளன. அதில் அப்படி என்னதான் சந்தோஷமோ?!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.