திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சீரான மின்சாரம் வழங்க 3 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு 5,000 பேர் களப்பணியில் ஈடுபட்டுள்ளதாக மாநில நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியது: தென்மாவட்டங்களில் பாதுகாப்புடன் கூடிய சீரான மின்சாரம் வழங்க மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. கனமழையால் ஒரு சில இடங்களில் ஏதேனும் மின்தடங்கல் ஏற்பட்டாலும், அதற்கான காரணங்களை கண்டறிந்து, அவற்றை உடனுக்குடன் சரிசெய்து சீரான மின்விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்தடங்கல் ஏற்பட்டால் இம்மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், தொலைத்தொடர்பு கோபுரங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் துரிதமாக மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகனமழையால் தற்போதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 79 உயரழுத்த மின்கம்பங்கள், 61 தாழ்வழுத்த மின்கம்பங்கள், 2 மின்மாற்றிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 20 உயரழுத்த மின் கம்பங்கள், 9 தாழ்வழுத்த மின்கம்பங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 உயரழுத்த மின்கம்பம், 4 தாழ்வழுத்த மின் கம்பங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் 2 தாழ்வழுத்த மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதிகப்படியான மழைநீர் சூழ்ந்துள்ள காரணத்தால் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம், நாசரேத், திருவைகுண்டம், திருநெல்வேலி கொக்கிரகுளம், தென்காசி ஓ. துலுக்கப்பட்டி, கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின்நிலையங்களில் தற்காலிகமாக மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்படும் 1573 மின்மாற்றிகளுக்கும் தற்காலிகமாக மின்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகத்தை சீராக்கும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள பொறியாளர்கள், களப்பணியாளர்கள் உள்ளடங்கிய 5 ஆயிரம் பேர் தற்போது களத்தில் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நிவாரண பணிகளை 2,78,557 மின்கம்பங்கள், 10,400 கி.மீ மின்கம்பிகள் மற்றும் 19466 மின்மாற்றிகள் உட்பட அனைத்து தளவாட பொருட்களும் கையிருப்பில் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.