நாடாளுமன்ற அத்துமீறலை அரசியலாக்குவது யார்? – பாஜக குற்றச்சாட்டுக்கு காங்கிரஸின் பதிலடி

புதுடெல்லி: மக்களவை அத்துமீறலை கவலைக்குரிய விஷயம் எனக் கூறியிருக்கும் பிரதமர் மோடி, அதுகுறித்து நாடாளுமன்றத்தில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்று பாஜகாவை காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.

மக்களவை அத்துமீறலை எதிர்க்கட்சிகள் அரசியாலாக்குகின்றன என்று பாஜக குற்றம்சாட்டியுள்ள நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “அந்தப் பிரச்சினையை யார் அரசியலாக்குகிறார்கள்? அவர்கள் (பாஜக) நாடாளுமன்றத்தை கேலிக்குறியதாக மாற்ற விரும்புகிறார்கள். அதனால் தான் மக்களவை அத்துமீறல் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பதற்கு பதிலாக நாடாளுமன்றத்துக்கு வெளியே கருத்து தெரிவித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 பேர் திடீரென மக்களவைக்குள் குதித்து, வண்ண புகை குப்பிகளை வீசினர். இதுபோல நாடாளுமன்ற வளாகத்திலும் 2 பேர் கோஷங்களை எழுப்பியவாறு வண்ண புகை குப்பிகளை வீசினர். இதையடுத்து, 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தி மொழியில் வெளியாகும் தினசரிக்கு அளித்த பேட்டி ஒன்றில், “நாடாளுமன்ற அத்துமீறல் தீவிரமான பிரச்சினை. இது மனவேதனையும் கவலையும் அளிப்பதாக உள்ளது. இதை குறைத்து மதிப்பிடவோ புறந்தள்ளவோ முடியாது. இந்த சம்பவத்துக்கு பின்னால் இருப்பவர்கள் யார், அவர்களுடைய நோக்கம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். அதேநேரம் இந்த விவகாரத்தை சர்ச்சையாக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்த பேட்டிக்குப் பதில் அளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, எதிர்க்கட்சிகள், நாட்டு மக்களின் அழுத்தம் காரணமாக பிரதமர் தற்போது மவுனத்தை கலைத்துள்ளார் என்று விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “உலகில் எங்கு என்ன நடந்தாலும் அதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி கருத்து தெரிவிக்கிறார். ஆனால், மக்களவை அத்துமீறல் குறித்து பேச நான்கு நாட்கள் ஆகியிருக்கிறது. சம்பவம் நடந்த அடுத்த நாள் அவர் நாடாளுமன்றத்துக்கு வந்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று மக்களுக்கு நம்பிக்கையூட்டியிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த விஷயத்தை காங்கிரஸ் கட்சி அரசியலாக்குவதாக பாஜக குற்றம்சாட்டியிருந்தது. அக்கட்சியின் எம்.பி. நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த 1991, ஜன.10 அன்று பத்ரி பிரசாத், ஜன.11-ம் தேதி பூபேந்திர சவுகான் ஆகியோர் மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்து சபாநாயகர் நோக்கி ஓடினர். அப்போது எந்தக் கேள்வியும் எழுப்பப்படவில்லை. சபாநாயகர் பதவி விலகவில்லை. நாடாளுமன்ற பாதுகாப்பு என்பது மக்களவை செயலகத்தின் பொறுப்பு. காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறது. நினைவுகளை தட்டி எழுப்புங்கள். அனைத்து விஷயங்களையும் அரசியலாக்குது நல்லதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.