இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழிலுக்காக தெரிவு செய்யப்பட்ட முதலாவது குழு நேற்று (18) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்ரேலுக்கு பயணமானது.
இந்தக் குழுவில் முப்பது பேர் இடம்பெற்றுள்ளதுடன், மேலும் இருபது பேர் கொண்ட மற்றுமொரு குழு இன்று (19) காலை இஸ்ரேல் செல்லவுள்ளதாகவும், முப்பது பேர் கொண்ட மற்றுமொரு குழு இன்று (19) இரவு இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்வில்,இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழிலுக்காக புறப்படும் முதற்கட்டத் தொழிலாளர்களுக்கான விமானப் பயணச்சீட்டுகள் அமைச்சர் திரு.மனுஷ நாணயக்காரவினால் வழங்கப்பட்டன.
இரு நாடுகளுக்குமிடையில் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு உடன்படிக்கைக்கு அமைவாக விவசாயத் துறையில் தொழிலுக்காக தொழிலாளர்களை அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில வாரங்களில் மேலும் பத்தாயிரம் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதன் போது தெரிவித்தார்.
இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்காக இடைத்தரகர்கள் எவருக்கும் பணம் வழங்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட அமைச்சர், பணம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானால், பணம் கொடுத்து அங்கு சென்ற தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் இருபதாயிரம் தொழிலாளர்களை இணைத்துக்கொள்ள இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.