புதுச்சேரி: “பள்ளி மாணவர்கள் லேப்டாப் கொள்முதலில் ரூ.90 கோடி ஊழல்” – பகீர் கிளப்பும் நாராயணசாமி

புதுச்சேரியில் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “புதிய நாடாளுமன்றம் திறந்து இரண்டு மாதங்களாகின்றன. அதில் பாதுகாப்பு அம்சம் சிறப்பாக இருப்பதாகவும், அச்சுறுத்தலின்றி இனி நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் என்றும் வாக்குறுதி அளித்தார் பிரதமர் மோடி. ஆனால் அங்கு போடப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்தை மீறி  உள்ளே நுழைந்த இரண்டு பேர், புகைக்குண்டுகளை வீசி, அமளி செய்திருக்கின்றனர். அத்துடன் பிரதமர் மோடியின் ஆட்சியை எதிர்த்தும் கோஷம் எழுப்பியிருக்கின்றனர்.

மோடி, அமித் ஷா

அதேபோல நாடாளுமன்றத்துக்கு வெளியில் பெண் உள்ளிட்ட இரண்டு பேர், பா.ஜ.க-வின் ஆட்சியைக் கண்டித்து, புகைக்குண்டுகளை வீசிப் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அத்துடன் எம்.பி-க்களுக்குப் பாதுகாப்பு அளிக்காத பிரதர் மோடி, வெட்கித் தலைகுனிய வேண்டும். 22 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட அதே நாளில், இரண்டு பேர் நுழைந்திருக்கின்றனர். இந்தச் சம்வத்துக்கு உள்துறை அமைச்சரும், பிரதமர் மோடியும் பதிலளிக்க வேண்டும் என்று, இந்தியா கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

ஆனால் அரசின் கையாளாகத்தனத்தை மறைப்பதற்காக, நான்கு நாள்களில் 92 எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்திருக்கின்றனர். இப்படி ஒரு சம்பவம் இந்திய வரலாற்றில் இதுவரை நடந்தது இல்லை. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சர்வாதிகார அரசு என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. புதுவையில் பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் பணியை வேகமாக அரசு செய்து வருகிறது. மாநில அரசு ரூ.380 கோடி செலவு செய்து  மீட்டர் பொருத்துவதால், பணத்தை செலுத்தியே மின்சாரம் பெற முடியும். இதில் 30 சதவிகிதம் கமிஷன் பெறப்படுகிறது. இந்தத் திட்டத்தால் இலவச மின்சாரம் வழங்குவது நிறுத்தப்படும். புதுவை மாநில தொழிற்சாலைகளில் இதை நடைமுறைப்படுத்தப் போகிறார்களா…

இலவச லேப்டாப் (மாதிரிப் படம்)

எந்த  மாநிலத்திலும் பிரீபெய்டு மின் மீட்டர் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஆனால் புதுவையில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தத் துடிக்கிறது. முதலமைச்சர் ரங்கசாமி பலவீனமடைந்துவிட்டாரா… ஏன் மத்திய அரசை அவர் எதிர்க்கவில்லை… புதுவை மக்கள் எதிர்ப்பு  தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். முதலமைச்சரும், மின்துறையின் அமைச்சரும் இதைப்பற்றி கவலைப்படவில்லை. மத்திய பா.ஜ.க-வின் திட்டத்தை அமல்படுத்துவதில், என்ஆர் காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு முனைப்புடன் இருக்கிறது.

புதுவை மக்களை என்.ஆர் காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு வஞ்சிக்கிறது. மக்களை ஏமாற்றி ஓட்டுகளை வாங்கிவிட்டு, துரோகச் செயல்களை அரசு செய்து வருகிறது. அதை முன்னிறுத்தி வரும் 26, 27 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் சார்பில் போராட்டம்  நடத்தப்படும் என மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் அறிவித்திருக்கிறார். பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் திட்டத்தை காங்கிரஸ் கண்டிக்கிறது. இந்தத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும். முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்கும் கூட்டங்களில் தலைமைச் செயலர், அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை, கோப்புகள் திருப்பி அனுப்பப் படுகின்றன என வெளிப்படையாக புலம்ப ஆரம்பித்திருக்கிறார்.

முதல்வர் ரங்கசாமி

முதலமைச்சர் அதிகாரத்தில் இந்த ஆட்சி இல்லையா… அமைச்சர்கள் லஞ்சம் வாங்குவதில்தான் குறியாக இருக்கின்றனர். அமைச்சர்கள் சூப்பர் முதலமைச்சர் தமிழிசையிடம் அதிகாரத்தை அடகுவைத்துவிட்டு, வலம் வருகின்றனர். கவர்னர் தமிழிசை முதலமைச்சர் பரிந்துரையை ஏற்காமல், தலைமைச் செயலர் பரிந்துரையை ஏற்கிறார். கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் கவர்னர் தலையீடு இருந்தது. காங்கிரஸ் ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

முதலமைச்சர் ரங்கசாமி அடிமை ஆட்சி நடத்துகிறார்.  முதலமைச்சர், அமைச்சர்கள் கோழைகளாக இருக்கின்றனர். கவர்னருக்கு மண்டியிட்டு சேவகம் செய்கின்றனர். புதுவையில் கல்வித்தரம் சீர்குலைந்துவிட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 9,000 சைக்கிள்களுக்கு பதிலாக, 12,000 ஆயிரம் சைக்கிள்கள் வாங்கி 30 சதவிகிதம் கமிஷன் பெற்றிருக்கின்றனர். இந்த சைக்கிள்கள் தரமற்று இருக்கின்றன. சக்கரம் தனியாக கழன்று ஓடுகிறது. ஒரு முட்டைக்கு ரூ.65 பைசா கமிஷன் வாங்குகின்றனர்.

மாட்டுத் தீவனம், முட்டை, சத்துணவு என அனைத்தையும் ஒருவர்தான் சப்ளை செய்கிறார். இதில் அனைத்திலும் கமிஷன் பெறுகின்றனர். இந்த ஆட்சி கமிஷன் ஆட்சி. 60,000 ஆயிரம் லேப்டாப்கள் வாங்குவதற்கு குளோபல் டெண்டர் விடவில்லை. லேப்டாப் வாங்குவதில் 30 சதவிகிதம் கமிஷன் பேசியிருக்கின்றனர். இதில் ரூ.90 கோடி ஊழல் நடக்கிறது. லேப்டாப் வாங்குவதற்கு குளோபல் டெண்டர் வேண்டும் என தலைமைச் செயலாளர் தெரிவித்தார். கூட்டுக் கொள்ளைக்கு ஒத்துழைக்காததால், தலைமைச் செயலரை முதலமைச்சர் ரங்கசாமி குறை கூறுகிறார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.