தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் நகைச்சுவை சக்கரவர்த்தியாக அசத்தியவர் கவுண்டமணி. அதன்பின் கதை நாயகனாக சில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தடபுடலாக அவர் மீண்டும் நாயகனாக நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன் படப்பிடிப்புகளின் அப்டேட் குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி…

ராமராஜனைப் போல, நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற கொள்கை முடிவோடு இருக்கும் கவுண்டமணி, ‘வாய்மை’ படத்திற்குப் பின், படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் ‘பழனிச்சாமி வாத்தியார்’, ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என இரண்டு படங்களில் கமிட் ஆனார். இதில் ‘பழனிச்சாமி வாத்தியார்’ படத்தில் சிவகார்த்திகேயன் அல்லது சந்தானம் இருவரில் ஒருவர் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர் என்று பேச்செல்லாம் வந்தது. அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் காமெடி டிராக் ரைட்டரான சாய் ராஜகோபால் இயக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’வின் படப்பிடிப்புதான் முதலில் தொடங்கியது.

அரசியல் நையாண்டிகள் ஜொலிக்கும் இந்தப் படத்தில் ரவிமரியா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை எனப் பலர் நடித்து வருகின்றனர். நடிகர் மாரிமுத்துவின் மறைவினால் அவரது கதாபாத்திரத்தில் ஓ.ஏ.கே சுந்தர் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி என வாரிசுகளும் நடிக்கின்றனர்.
கவுண்டமணியின் வேண்டுகோளுக்கிணங்க சென்னையில்தான் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. நடிகர் ரவிமரியா, இதில் அரசியல்வாதியாக கவுண்டமணியுடன் காமெடி செய்திருக்கிறார். சித்ரா லட்சுமணன், ரவிமரியாவுடன் கவுண்டமணி வரும் காட்சிகள் காமெடிக்கு கேரண்டி என்கிறார்கள். குறுகிய காலகட்ட தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தின் இரண்டு ஷெட்யூல்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் பத்து நாள்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருக்கிறது என்கிறார்கள்.

இதற்கிடையே கவுண்டமணியின் மற்றொரு படமான ‘பழனிச்சாமி வாத்தியார்’ படத்தின் இயக்குநர் மாற்றம் காரணமாக அதன் படப்பிடிப்பு தொடங்கப்படாமலே இருக்கிறது. சென்ற மாதமே அதன் படப்பிடிப்பு துவங்கி, ஒரே மூச்சாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் பெயர்தான் ‘பழனிசாமி வாத்தியா’ரே தவிர கவுண்டமணியின் கதாபாத்திரம் வாத்தியார் அல்ல. அவர் கழுதை மேய்ப்பவராக வருகிறார். இதில் கவுண்டமணியின் ஜோடியாக சஞ்சனா சிங் நடிக்கிறார்.
யோகி பாபு, கஞ்சா கருப்பு, ராதாரவி, சித்ரா லட்சுமணன், டி.சிவா, ஆர்.கே.சுரேஷ், ஜே.எஸ்.கே. சதீஷ் எனப் பலர் நடிக்கின்றனர். கௌரவ வேடத்தில் சிவகார்த்திகேயனும் நடிக்கிறார். ஆனால் அவர் இன்னமும் தேதிகள் கொடுக்காமல் இருப்பதால், அவர் தேதிகளை வைத்து, படப்பிடிப்பைத் திட்டமிடவிருக்கின்றனர். வரும் ஜனவரியில் ‘பழனிச்சாமி வாத்தியார்’ படப்பிடிப்பு தொடங்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.