Tamil News Today Live: டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர்; ரூ.12,659 கோடி வழங்கக் கோரிக்கை!

டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர்; ரூ.12,659 கோடி வழங்கக் கோரிக்கை!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, ரூ.12,659 கோடி வழங்குமாறு கோரிக்கை முன்வைத்திருக்கிறார். மேலும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தற்காலிகமாக 7,033 கோடி ரூபாயும் வழங்க கோரிக்கை வைத்திருக்கிறார்.

பிரதமருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள விரைந்து நிதி ஒதுக்கீடு செய்திடக் கோரி, முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

`அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து!’ – சென்னை உயர் நீதிமன்றம்

பொன்முடி

2016-ம் ஆண்டு பொன்முடியும், அவருடைய மனைவியும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்துச் சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்த சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு ரத்துசெய்யப்பட்டது. தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கின் விசாரணை டிசம்பர் 21 காலை 10:30-க்கு தள்ளிவைக்கப்பட்டது. டிசம்பர் 21-ம் தேதி ஆஜராக பொன்முடிக்கும், அவரின் மனைவிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

நெல்லையில் வடியத் தொடங்கும் வெள்ளம்!

தென்மாவட்டங்களில் கடந்த இரு நாள்களாகப் பெய்த கனமழையைத் தொடர்ந்து பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நெல்லையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று மழையின் தாக்கம் குறைந்திருக்கும் நிலையில் ஆற்றிலும் வெள்ளம் குறையத் தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாக நெல்லையிலும் வெள்ளம் வடியத் தொடங்கியிருக்கிறது.

இதற்கிடையே நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்துக்கு முன்பு வெள்ளநீரில் ஆண் ஒருவரின் பிணம் மிதந்தது. இது தொடர்பான புகார் சென்ற பிறகு, பணியாளர்கள் வந்து உடலை மீட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.