டாக்கா நம் அண்டை நாடான வங்க தேசத்தில், பொதுத் தேர்தலுக்கு எதிராக எதிர்க்கட்சி நடத்திய போராட்டத்தின்போது, பயணியர் ரயில் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டது; இதில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பலியாகினர்.
வங்கதேசத்தில் அடுத்த மாதம் 7ம் தேதி பொதுத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதற்கு பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆளும் அவாமி லீக் ஆட்சியில் இருந்தால் தேர்தல் நியாயமான முறையில் நடக்காது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி, அதற்கு முன்பாக காபந்து அரசை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நாடு முழுதும் நேற்று வங்கதேச தேசியவாத கட்சி போராட்டம் நடத்தியது. அப்போது, தலைநகர் டாக்காவில் இருந்து புறப்பட்ட பயணியர் ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
புறப்பட்ட சில மணி நேரத்தில் ரயிலின் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, தேஜ்காவ்ன் நிலையத்தில், ரயில் நிறுத்தப்பட்டது.
அங்கு தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேர போராட்டத்துக்கு பின், தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் குழந்தை மற்றும் அதன் தாய் உட்பட நான்கு பேர் உடல் கருகி பலியாகினர். சிறுவன் ஒருவன் மாயமானான்.
மூன்று ரயில் பெட்டிகளும் தீயில் கருகி சேதமடைந்தன. உயிரிழந்தவர்கள் இருவர் உடல் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement