ஆளுநர் தமிழிசை முன் அதிகாரிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய முதல்வர் ரங்கசாமி! – அரசு விழாவில் நடந்தது என்ன?

புதுச்சேரி அரசுக்கும், டெல்லி என்.எஸ்.கே.எஃப்.டி.சி நிறுவனத்துக்கும் இடையே, கழிவுநீர் பராமரிப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி, காமராஜர் மணி மண்டபத்தில் இன்று நடந்தது. துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்ட அந்த விழாவில், சபாநாயகர் செல்வம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, பொதுப்பணித் துறை செயலர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் முதல்வர் ரங்கசாமி

அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “நீண்ட நாள்களாக எதிர்பார்த்திருந்த நிகழ்ச்சி இது. வாய்க்கால்களை சுத்தப்படுத்தவும், கழிவுகளை அகற்றவும் இயந்திரங்கள் வாங்க வேண்டும் என பல வருடங்களாக பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கூறி வருகிறேன். அது தற்போது நடந்துள்ளது. இதன் பிறகு இது செயல் வடிவம் பெறுவது, அதிகாரிகளான உங்கள் கையில்தான் உள்ளது. பிறர்மீது பழி போடக் கூடாது. அரசு செயலர்கள் கோப்புகளுக்கு உடனுக்குடன் அனுமதி தருவதில்லை. இதனால் பொதுப்பணித் துறையில் ஒப்பந்ததாரர்கள் பணி செய்ய முன்வருதில்லை. எளிமையாக செய்ய வேண்டிய வேலையை கடுமையாக மாற்றி விடுகின்றனர். இதனால் ஒப்பந்ததாரர்கள் அச்சப்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

புதுவை நகர பகுதியில் குடிநீர் அதிக அளவு உப்புத்தன்மை கொண்டதாக உள்ளது. முதற்கட்டமாக 50 எம்.எல்.டி கடல் நீரை குடிநீராக மாற்ற திட்டமிட்டுள்ளோம். ஆனால் இந்த திட்டத்தை பொதுப்பணித் துறை செயலர் கண்டு கொள்ளவில்லை. அது ஏன் என எனக்குப் புரியவில்லை. நகரப் பகுதிக்கு நல்ல குடிநீர் கொடுக்க வேண்டும். சட்டமன்றத்தின் எதிரில்தான் பாரதி பூங்கா உள்ளது. அமைச்சர்கள், எம்.எல் ஏ-க்கள் என அனைவரும் தினமும் வந்து செல்கிறோம். ஆனால் அந்த பாரதி பூங்கா தற்போது எப்படி இருக்கிறது… நகராட்சி அதிகாரிகள் அதை சரியாக வைத்துள்ளார்களா… வாய்க்கால் கட்டை உடைந்தால் உடனடியாக சீரமைப்பதில்லை. பொதுப்பணித் துறை ஊழியர்களேகூட அதை சீரமைக்கலாம். ஆனால் யாரும் அதை முன்வந்து செய்வதில்லை. 10 நாள்களாக அப்படியே கிடக்கிறது. அதைப் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள்?

விழாவில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள்

அரசு எந்த திட்டத்தையும் தீட்டத்தான் முடியும். அதற்கு செயல்வடிவம் கொடுப்பது அதிகாரிகள் கையில்தான் உள்ளது. இதில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். அரசுத் துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பி வருகிறோம். ஊழியர்கள் பற்றாக்குறை என இனிமேல் குறை சொல்ல முடியாது. சென்னையிலும், தென் தமிழகத்திலும் கடுமையான மழை பெய்துள்ளது. இதில் மக்கள் எவ்வளவு சிரமப்பட்டுள்ளார்கள் என்பதை கண்கூடாகப் பார்த்துள்ளோம். புதுவையில் வடிகால் இருப்பதால் தண்ணீர் வெளியேறுகிறது. இருந்தாலும் இப்படிப்பட்ட மழையை சமாளிக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்க, மத்திய அரசிடம் ரூ.500 கோடி நிதி கேட்டுள்ளோம். சிவராந்தகத்திலிருந்து நகரப் பகுதிக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தோம். அது முடியாததால், நகர பகுதிக்கு இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, “தூய்மைப் பணியாளர்களுக்கென நம் பிரதமர் தனி துறையை உருவாக்கியுள்ளார். தூய்மைப் பணியாளர் ஆணையம் உருவாக்கப்பட்டு, அதற்கான ஆணையர், இணை அமைச்சருக்கான அதிகாரத்துடன் நியமிக்கப்பட்டுள்ளார். தூய்மைப் பணியாளர்கள் மீது பிரதமர் தனி கவனம் செலுத்துகிறார். பிரதமர் மோடி பொறுப்பேற்ற போதே தூய்மை இந்தியா திட்டத்தைத்தான் தொடங்கினார். எந்த திட்டமாக இருந்தாலும், அது செயல்வடிவம் பெற்றால்தான் மக்களுக்க பயன்கிடைக்கும். பெஸ்ட் புதுச்சேரி வேண்டும் என்றால் ஃபாஸ்ட் புதுச்சேரி வேண்டும். முதலமைச்சர் பேசும்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் இடையேயான பிரச்னைகளை, இருவரும் அமர்ந்து பேசி தீர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த கருத்தை நான் தெரிவித்திருந்தேன். ஆனால் அந்த நிலை புதுவையில் இல்லை.

திட்ட காலதாமதத்திற்கான காரணம் குறித்து புதுவையின் தலைமை செயலாளர் அமர்ந்து பேச வேண்டும். அதிகாரிகளிடம் அதற்கான விளக்கத்தை பெற வேண்டும். துறைதோறும் அதிகாரிகளிடம் பேசி காலதாமதத்தை தவிர்க்க வேண்டும். வரும் புத்தாண்டில் தாமதத்தை களைந்து திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே தலைமை செயலரிடம் நான் பேசியிருக்கிறேன். சில அதிகாரிகள் தெரிந்தும் செய்கின்றனர், சிலர் தெரியாமல் செய்கின்றனர், சிலர் திட்டத்தின் தீவிரம் அறியாமல் செய்கின்றனர். சுமுகமாக இதை தீர்க்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.