ஹரியாணா: இஸ்ரேலில் கட்டுமானப் பணிகளுக்காக விண்ணப்பங்களை வரவேற்று அம்மாநில அரசு வெளியிட்ட விளம்பரம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலில் வேலை பார்க்கச் செல்ல யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் விளக்கமளித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் 2 மாதங்களுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இஸ்ரேலில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஆட்கள் தேவைப்படுகிறார்கள். 1000 பேருக்கு வேலை இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஹரியாணா அரசு விளம்பரம் கொடுத்திருந்தது. இதை அரசியல் கட்சிகள் விமர்சனத்துக்கு உள்ளாக்க, “துபாயில் நடந்த ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் இஸ்ரேலுடன் ஹரியாணா அரசு ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டது. இஸ்ரேலுக்குத் தேவையான பணியாளர்களைக் கொணர்ந்து கொடுப்பது என உடன்பாடு எட்டப்பட்டது.
அதன்படி, இஸ்ரேல் கட்டுமான வேலை செய்யும் 1000 பணியாளர்களைக் கேட்டது. அதன் அடிப்படையில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியிருந்தோம். நிறைய நாடுகள் ஆள் பற்றாக்குறையைக் குறிப்பிட்டு வேலைக்கு ஆட்கள் கேட்கின்றன. சட்ட விதிகளை ஆராய்ந்து அதற்கு உட்பட்டு அவர்களை அனுப்புகிறோம். இஸ்ரேலில் மக்கள் வசிக்கின்றனர். அங்கே வேலைக்குச் செல்லலாம் என விரும்புவோர் மட்டும் சுயவிருப்பத்தின் அடிப்படையில் செல்லலாம்” என்று விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, “ஹரியாணா அரசு செயலற்ற அரசாக மாறிவிட்டது. இங்கே வேலைவாய்ப்பில்லை. அதனால், இப்படி போர் நடைபெறும் நாட்டுக்கு வேலைக்கு ஆள் கோரி விளம்பரம் வெளியிடுகிறது. இது ஊழல் அரசு” என்று தீபேந்திர சிங் ஹூடா விமர்சித்திருந்தார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போரால் இஸ்ரேலில் வேலை பார்த்துவந்த 1 லட்சம் பாலஸ்தீனர்கள் வேலைக்கான தகுதியை இழந்தனர். இந்நிலையில், இஸ்ரேல் இந்தியாவில் இருந்து 90 ஆயிரம் கட்டுமானப் பணியாளர்களைப் பணியமர்த்தப் போவதாகக் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. அதன் நீட்சியாகவே ஹரியாணா அரசும் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.