புதுடெல்லி: காசி தமிழ் சங்கமம்-2 நிகழ்ச்சியை காண தமிழகத்திலிருந்து வாரணாசிக்கு இரண்டாவது குழு வந்தடைந்தது. நேற்று விடியலில் வந்த ‘யமுனா’ எனும் பெயரிலான இக்குழுவில் ஆசிரியர்கள் இடம் பெற்றிருந்தனர்.
உத்தரப்பிரதேசம் வாரணாசி ஜங்ஷனுக்கு வந்தவர்களை, ‘வணக்கம் காசி’, ‘ஹர் ஹர் மஹாதேவ்’ என கோஷமிட்டு வரவேற்கப்பட்டனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் உ.பியின் நீதிமன்றம் மற்றும் பதிவுத்துறையின் இணை அமைச்சர் ரவீந்திரா ஜெய்ஸ்வால், வடகிழக்கு ரயில்வேயின் பிராந்திய மேலாளர் வினித் குமார் ஸ்ரீவாத்ஸவா உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். தமிழகத்திலிருந்து சிறப்பு ரயிலில் கிளம்பி சுமார் 225 பேரை உடுக்கை மேளம் இசைத்து மலர்கள் தூவி வரவேற்கப்பட்டனர். இவர்களுக்கு முன்பாக, தமிழகத்திலிருந்து ‘கங்கா’ எனும் பெயரில் வந்த மாணவர்கள் குழு, வாரணாசியில் தனது பயணத்தை முடித்துக் கொண்டது.
இவர்கள் அனைவரும் இன்று காலை பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு தரிசனம் செய்ய கிளம்பிச் சென்றனர். அங்கிருந்து அனைவரும் நாளை தமிழகம் திரும்பிச் செல்கின்றனர். இதையடுத்து, ‘கோதாவரி’ எனும் கைவினைஞர்கள், ‘சரஸ்வதி’ எனும் ஆன்மிகக் குழுவினர் மற்றும் ‘நர்மதா’ எனும் விவசாயிகள் கொண்ட குழு வரவிருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து, ‘சிந்து’ எனும் எழுத்தாளர்கள், ‘காவிரி’ எனும் வியாபாரிகள் கொண்ட குழுக்களும் வாரணாசிக்கு வருகின்றனர்.
இவர்களது சிறப்பு ரயில் சென்னை மற்றும் கோயபுத்தூரிலிருந்து கிளம்புகிறது. காசி தமிழ் சங்கமம்-2 நிகழ்ச்சிக்கு வரும் அனைவரும் வாரணாசியிலுள்ள உ.பி வாசிகளுடன் நேரடியாக உரையாட உள்ளனர். இவர்களுக்கான சந்திப்புகள் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இவர்கள் அனைவருக்கும் வாரணாசியின் காலபைரவன் கோயில், அனுமர் படித்துறை, தஸ் அசுவமேதப் படித்துறையில் அன்றாடம் நடைபெறும் கங்கா ஆரத்தி, அருகிலுள்ள சாரணாத் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
கடந்த வருடம் டிசம்பரில் முடிந்த முதல் காசி தமிழ் சங்கமத்தில் அனைவருக்கும் தமிழ்நாடு வகை உணவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த முறை அதுபோல் அல்லாமல் வட இந்திய முறை உணவு வகைகள் பறிமாறப்படுகின்றனர். கங்கை கரைகளின் படித்துறைகளில் ஒன்றான நமோ காட்டில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெறுகிறது. இதில், உ.பி மற்றும் தமிழ்நாடு கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் இயல், இசை மற்றும் நாடகங்களின் பத்து வகை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடந்து வருகின்றன.
வாரணாசியின் மூத்த ஷெனாய் கலைஞரான துர்கா பிரசாத் குழுவினரின் இசை இடம் பெற்றுள்ளது. இத்துடன் பிரபல தபேலா கலைஞரான சேத்தன் சுக்லாவின் குழுவினரும் இடம் பெற்றுள்ளனர். அதேபோல், தஞ்சாவூரின் டி.வினோத பாரதியின் தப்பட்டம் கச்சேரி, கோயம்புத்தூர் விஜயகுமாரின் பேண்டு வாத்தியம் முழக்கமும் நடைபெற்றது. சென்னையை சேர்ந்த பி.சுந்தரேசனின் பரத நாட்டியம் இத்துடன், சிவராமனின் வயலின், பஞ்சனின் பாட்டு, வெங்கடசுப்பரமணியனின் மிருதங்கமும் இணைந்திருந்தது. நாட்டுப்புற நடன நாடகத்தின் கொலை ஆட்டத்தை பெரம்பலூரின் எம்.செல்லத்துரை தன் குழுவினருடன் நிகழ்த்தினார். என்.ஜிவராவின் இயக்கத்தில் தஞ்சாவூரின் நடனடிக் கலைஞர்கள் மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்றவை ஆடினர்.