டிசம்பர் இறுதி வரை காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகா 3,128 கன அடி நீரை திறக்க பரிந்துரை

புதுடெல்லி / பெங்களூரு: கடந்த நவம்பர் 22-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் டிசம்பர் 19-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 2,700 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 91-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி மூலம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய், தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கர்நாடக அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவான மழையின் அளவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசின் தரப்பில், ‘‘உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவின்படி, தமிழகத்துக்கு டிசம்பர் மாதம் வரை வழங்க வேண்டிய நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால் நிகழாண்டில் இதுவரை 60 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. 90 டிஎம்சி நீர் இன்னும் நிலுவையில் உள்ளது. டிசம்பரில் மட்டும் 14 டிஎம்சி நீரை திறக்க வேண்டும். சம்பா, குறுவை சாகுபடிக்கு தேவையான நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.

இதற்கு கர்நாடக அரசின் தரப்பில், ‘‘கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் அணைகளில் குறைந்த அளவிலேயே நீர் இருப்பில் உள்ளது. நிகழாண்டில் 4 அணைகளுக்கும் சேர்த்து 50.367 டிஎம்சி நீர் மட்டுமே வந்துள்ளது. தமிழகத்துக்கு கூடுதலாக நீரை திறந்தால் கர்நாடகாவில் குடிநீர் பஞ்சம் ஏற்படும்”என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பேசிய காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா, ‘‘தமிழகத்தின் விவசாய தேவைக்காக டிசம்பர் மாதம் இறுதிவரை விநாடிக்கு 3,128 கன அடி நீரை திறந்துவிட வேண்டும். அதாவது டிசம்பர் 20-ம் தேதி முதல் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் விநாடிக்கு 3,128 கன அடி நீர் தமிழகத்துக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும். ஜனவரி மாத இறுதி வரை 1,030 கன அடி நீரை திறந்துவிட வேண்டும்” என பரிந்துரை செய்தார்.

காவிரி ஒழுங்காற்று குழுவின் இந்த பரிந்துரைக்கு கர்நாடகாவில் விவசாய அமைப்பினரும், கன்னட அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக, மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடக்கூடாது என கர்நாடக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.