புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக மேலும் 49 பேர் உட்பட மொத்தம் 141 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடர்பாக கடந்த 4 நாட்களாக எதிர்க்கட்சிகள் மக்களவை, மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு வந்தன.நேற்று முன்தினம் மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இருக்கைக்குத் திரும்புமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களை சபாநாயகர் மீண்
டும் மீண்டும் கேட்டுக் கொண்டபோதும் அவர்கள் திரும்பவில்லை.
இதையடுத்து மக்களவை உறுப்பினர்கள் 33 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல அமளியில் ஈடுபட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 45 பேர் என மொத்தம் 78 எம்.பி.க்கள் நேற்று முன்தினம் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த வாரம் மக்களவையில் 13 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் ஒரு எம்.பி. என மொத்தம் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இதையடுத்து 2 அவைகளிலும் சேர்ந்து 92 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் இதே கோரிக்கையை முன்வைத்து நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவையை ஒத்திவைப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அவை ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் அமளியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், 49 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தார். இதையடுத்து அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வரலாற்றில் முதல்முறை: நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் நடந்தது தொடர்பாக, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் அறிக்கைகள் மற்றும் விவாதத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததற்காக மொத்தம் 141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 49 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே கூட்டத்தொடரில் 141 எம்.பி.க்கள் 2 அவைகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில் திருமாவளவன், கார்த்தி சிதம்பரம், ஜெகத்ரட்சகன், சசி தரூர், பரூக் அப்துல்லா, டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் அடங்குவர். இக்கூட்டத்தொடர் வரும் 22-ம் தேதி நிறைவடைய உள்ளது. எம்.பி.க்கள் இடைநீக்கம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, ‘‘எந்தவிதமான அர்த்தமுள்ள விவாதமும் இல்லாமல் மசோதாக்களை அமல்படுத்துவதற்காக மட்டுமே எம்.பி.க்கள் மீதான இடைநீக்க நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது’’ என்றார்.