பாலக்காடு:நாட்டில் ஆற்றல் சேமிப்பு துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு அளித்து வரும் மத்திய அரசின் எரிசக்தி பாதுகாப்பு விருது, கேரளாவின் ‘மில்மா’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
கேரள மாநிலம், காசர்கோடு, கண்ணுார், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு மாவட்டக் கிளைகள் அடங்கிய, மலபார் ‘மில்மா’ பிரிவுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினமான, டிச., 14ல் டில்லியில் உள்ள விக்யான் பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்ற நிகழ்ச்சியில், மத்திய எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் இருந்து, மில்மா தலைவர் மணி, பொறியியல் துறை தலைமை மேலாளர் பிரேமானந்தன், விருது பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய எரிசக்தி மற்றும் கனரக துறை இணை அமைச்சர் கிரிஷல் பால் குஜ்ஜர், மத்திய எரிசக்தி துறை செயலர் பங்கஜ் அகர்வால் பங்கேற்றனர்.
விருது கிடைத்தது குறித்து மில்மா தலைவர் மணி கூறியதாவது:
எரிசக்தி திறன், பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறையை ஊக்குவிப்பதற்காக, மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆற்றல் திறன் பணியகம் இந்த விருது பெறும் நிறுவனங்களை தேர்வு செய்கிறது.
எரிசக்தி சேமிப்பிற்காக மலபார் மில்மா செயல்படுத்திய புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு இந்த விருது அங்கீகாரம் அளிக்கிறது.
தேசிய அளவில் சிறந்த எரிசக்தி பாதுகாப்பு நடைமுறைகளுக்கான பொறியாளர்கள் மற்றும் மேலாளர்கள் சங்கத்தின், 2022 விருதும், மலபார் மில்மா பிரிவுக்கு கிடைத்தது.
இந்த ஆண்டு எரிசக்தி மேலாண்மை மையத்தின் எரிசக்தி பாதுகாப்பு விருது, மலபார் மில்மாவின் கண்ணுார் கிளைக்கு கிடைத்துள்ளது.
தேசிய அளவில் மிகவும் துாய்மையான பால் கொள்முதல் செய்யும் பிரிவு என்ற வெகுமதியும் மலபார் பிரிவுக்கு கிடைத்துள்ளது. ஆயுர்வேத மாத்திரைகளை கால்நடை சிகிச்சையில் திறம்பட பயன்படுத்திய மலபார் மில்மாவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
நாட்டிலேயே முதல் முறையாக பால் பண்ணையாளர்களுக்கு, வானிலை அடிப்படையிலான காப்பீடு திட்டம் அமலுக்கு கொண்டு வந்தது மலபார் பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது. பால் உற்பத்தி பொருட்கள் தற்போது, ஏழு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்