IPL Auction 2024: ஐபிஎல் 2024க்கான மினி ஏலத்தில் மொத்தம் 72 வீரர்கள் வாங்கப்பட்டனர். மினி ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களில் அதிக எண்ணிக்கையில் பந்துவீச்சாளர்கள் இருந்தனர். அதேநேரத்தில் அதிகபட்ச பணமும் பந்து வீச்சாளர்களுக்காக செலவிடப்பட்டது. மினி ஏலத்தில் வாங்கப்பட்ட மொத்த வீரர்களில் 26 பந்துவீச்சாளர்கள், 25 ஆல்ரவுண்டர்கள், 13 பேட்ஸ்மேன்கள் மற்றும் 8 விக்கெட் கீப்பர்கள் அடங்குவர்.
ஐபிஎல் 2024 (Indian Premier League 2024) தொடருக்கான நேற்று நடந்த மினி ஏலத்தில் 24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணியால் வாங்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் அதிக விலைக்கு விற்கப்பட்டார். இந்த ஏலத்தில் மட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றிலும் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் பெற்றார்.
ஐபிஎல் மினி ஏலத்தில் யார் எவ்வளவு பணத்திற்கு வாங்கப்பட்டார்கள்? பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர்களில் யார் அதிக ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பதைக் குறித்து பார்ப்போம்.
அதிக ஏலத்திற்கு எடுக்கப்பட்ட பந்து வீச்சாளர் யார்?
26 பந்து வீச்சாளர்களுக்கு மொத்தம் ரூ.90.05 கோடி செலவழிக்கப்பட்டது, அதில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் மட்டுமே பாதி தொகைக்கு (45.25 கோடி) ஏலம் எடுக்கப்பட்டனர். ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையான மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) ரூ.24.75 கோடிக்கு வாங்கப்பட்டார். அதற்கு அடுத்ததாக பேட் கம்மின்ஸ் (Pat Cummins) ரூ.20.50 கோடிக்கும் வாங்கப்பட்டார்.
அதிக ஏலத்திற்கு எடுக்கப்பட்ட ஆல்ரவுண்டர் யார்?
25 ஆல்ரவுண்டர்களுக்காக மொத்தம் ரூ.78.85 செலவிடப்பட்டது. ஆல்-ரவுண்டர்களில் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் (Daryl Mitchell) அதிக விலைக்கு வாங்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டேரில் மிட்செலை 14 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இது தவிர தமிழக வீரர் ஷாருக் கான் பெரும் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவரை 7.4 கோடி விலை கொடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.
அதிக ஏலத்திற்கு எடுக்கப்பட்ட பேட்ஸ்மேன் யார்?
ஐபிஎல் மினி ஏலத்தில், 10 அணிகளும் சேர்ந்து மொத்தம் 13 பேட்ஸ்மேன்களை மட்டுமே வாங்கியது. இதற்காக மொத்தம் ரூ. 44.20 கோடி செலவிடப்பட்டது. பேட்ஸ்மேன்களில் அதிக விலைக்கு சமீர் ரிஸ்வி (Sameer Rizvi) வாங்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் இளம் வீரர் சமீர் ரிஸ்வி 8.40 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.
அதிக ஏலத்திற்கு எடுக்கப்பட்ட விக்கெட் கீப்பர்கள் யார்?
ஐபிஎல் 2024 ஏலத்தில் மொத்தம் 8 விக்கெட் கீப்பர்கள் வாங்கப்பட்டனர். விக்கெட் கீப்பர்களுக்காக மொத்தம் ரூ.13.35 கோடி செலவிடப்பட்டு உள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த குமார் குஷாக்ரா (Kumar Kushagra) மிகவும் விலை உயர்ந்தவராக இருக்கிறார். 19 வயதான விக்கெட் கீப்பர் குமார் குஷாக்ராவை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரூ. 7.2 கோடிக்கு வாங்கியது.