வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: ‛‛ அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை போட்டியிட உச்ச நீதிமன்றம் அனுமதிக்காவிட்டால், நானும் போட்டியில் இருந்து விலகுவேன் ” என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்க உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிட கடும் போட்டி நிலவி வருகிறது. முன்னாள் அதிபர் டிரம்ப், நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோர் போட்டியில் உள்ளனர்.
கடந்த 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து, பார்லிமென்டை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இது குறித்த வழக்கை விசாரித்த கொலராடோ நீதிமன்றம், 2024 தேர்தலில் போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர் என தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து டிரம்ப், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் விவேக் ராமசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த தீர்ப்பை சட்ட விரோதமாக பார்க்கிறேன். கொலராடோவில் நடைபெற உள்ள குடியரசு கட்சியின் ஆரம்ப கட்ட தேர்தலில் போட்டியிட டிரம்ப் அனுமதிக்கப்படா விட்டால், நானும் போட்டியில் இருந்து விலகுவேன். குடியரசு கட்சி மற்ற வேட்பாளர்களும் இதே போன்று விலக வேண்டும். இல்லை என்றால், அவர்கள் இந்த சட்ட விரோத சூழ்ச்சியை அமைதியாக அங்கீகரிக்கிறார்கள் என அர்த்தமாகிவிடும். இது அமெரிக்காவிற்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் . இவ்வாறு விவேக் ராமசாமி கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement