“தமிழ்நாட்டின் தேவைகளைக் கவனத்துடன் கேட்டறிந்தமைக்குப் பிரதமருக்கு நன்றி” – ஸ்டாலின்
டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், ஏற்கெனவே அறிவிக்கபட்டபடி பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்த சந்திப்பில், தென் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரண உதவி குறித்தும் மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கைகளை முன்வைத்தார். இதுகுறித்து ஸ்டாலின் தனது X சமூக வலைதள பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலையைப் பற்றி எடுத்துரைத்தேன்.

நடைபெற்று வரும் மீட்புப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும், முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைக்கவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி வேண்டி கோரிக்கை மனுவை அளித்தேன்.

இத்தகைய கடினமான காலத்தில் தமிழ்நாட்டின் தேவைகளைக் கவனத்துடன் கேட்டறிந்தமைக்குப் பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருகிறார்.