வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான, ‘பிரைமரி’ எனப்படும், முதன்மை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை தகுதி நீக்கம் செய்து கொலராடோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் தகுதியற்றவர்’ என, அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் கடந்த 2016ல் போட்டியிட்ட குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று, நான்காண்டுகள் அதிபராக பதவி வகித்தார்.
கடந்த 2020ல் நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக தேர்வானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார்.
தடியடி
ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, அமெரிக்க பார்லிமென்டில் 2021 ஜன., 6ல் நடந்தது.
அன்று பார்லி.,யை நோக்கி டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தனர். அவர்களை பார்லி.,க்குள் நுழையவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
போலீசுக்கும், டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார், தடியடி நடத்தினர்.
ஆத்திரமடைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயுதங்களால் தாக்க துவங்கியதும், போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேலும், அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததும் அதிபர் மாளிகையை காலி செய்த டிரம்ப், முக்கிய ஆவணங்களை தேசிய ஆவணக் காப்பகத்தில் ஒப்படைக்காமல் தன்னுடன் எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அமெரிக்க பார்லிமென்ட் கட்டடமான, ‘கேப்பிடோல்’ கட்டடம் முற்றுகையிடப்பட்ட வழக்கை விசாரித்த கொலராடோ மாகாண நீதிமன்றம், ‘அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர்’ என, உத்தரவிட்டது.
மேலும், கொலராடோவில் நடக்கவுள்ள குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கான முதன்மை தேர்தலுக்கான ஓட்டுச்சீட்டில் டிரம்ப் பெயர் இடம் பெறக்கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் இது போன்ற நடவடிக்கையை எதிர்கொள்ளும் முதல் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் என்ற பெயர் அவருக்கு கிடைத்துள்ளது.
ஆதரவாளர்களைத் திரட்டி அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவோர், பதவியில் இருக்க முடியாது என்பது அமெரிக்க அரசியலமைப்பின் விதி. இந்த விதி மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படும். இந்த விதியை நீதிமன்றம் பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக, டிரம்பின் பிரசார பிரிவு செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.
சிக்கல்
வரும் 2024, மார்ச் 5ம் தேதி குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான முதன்மை தேர்தல் நடக்க உள்ளது. அதில், டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக ஓட்டுகள் பதிவானாலும், நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்துள்ள காரணத்தால், அவை செல்லுபடியாகாது.
அதேவேளையில், இந்த தகுதி நீக்க உத்தரவு முதன்மை தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். மேல்முறையீட்டிலும் டிரம்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படும்.
இந்த தீர்ப்பு சட்டவிரோதமானது. இது, அமெரிக்காவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். கொலராடோ முதன்மை தேர்தல் ஓட்டுச்சீட்டில் டிரம்ப் பெயர் இடம்பெறாவிட்டால், நானும் போட்டி யில் இருந்து விலகுவேன். குடியரசு கட்சியின் இதர வேட்பாளர்களும் விலக வேண்டும்.
விவேக் ராமசாமி
அதிபர் வேட்பாளர், குடியரசு கட்சி
‘நானும் விலகுவேன்!’
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்