மாயமான எம்எச்-370 விமானத்தின் பெரிய பாகத்தை கண்டுபிடித்தேன்.. ஆஸ்திரேலிய மீனவர் சொல்கிறார்

சிட்னி:

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச்-370 என்ற பயணிகள் விமானம் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி கோலாலம்பூரில் இருந்து சீனா நோக்கி சென்றபோது காணாமல் போனது. அதில் 227 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என 239 பேர் இருந்தனர். விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக, சுமார் 120,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தேடியும், விமானம் எந்த இடத்தில் விழுந்தது என்பதை கண்டறிய முடியவில்லை.

ஆப்பிரிக்க கடற்கரைகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் தீவுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளின் பல துண்டுகள் எம்எச்-370 விமானத்தின் துண்டுகள் என உறுதிப்படுத்தப்பட்டன. ஆனால் விமானத்தின் பெரும்பகுதி கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, மாயமான விமானம் குறித்த மர்மம் நீடிக்கிறது.

இந்நிலையில், எம்எச்-370 விமானம் காணாமல் போன 6 மாதங்களுக்கு பிறகு விமானத்தின் பெரிய பாகத்தை கண்டுபிடித்ததாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மீனவர் கிட் ஆல்வர் (வயது 77) கூறியது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. விமானம் காணாமல் போய் 9 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அவர் இப்போது இந்த தகவலை கூறியிருக்கிறார். ஆனால் இதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இது தொடர்பாக கிட் ஆல்வர், ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விமானம் காணாமல் போய் 6 மாதங்களுக்கு பிறகு ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றபோது எங்களின் இழுவை வலையில் மிகப்பெரிய பொருள் சிக்கியது. அது ஒரு பெரிய ஜெட் விமானத்தின் பெரிய இறக்கையாக இருக்கலாம். தனியார் விமானத்தைவிட அது பெரியதாக இருந்தது. அதை இழுத்து கடலின் மேற்பரப்பிற்கு கொண்டு வர முயற்சித்தபோது விசைப்படகின் இழுவை என்ஜின் மிகவும் சூடானது.

விமான இறக்கையை கண்டுபிடித்த இடத்தை அதிகாரிகளுக்கு இப்போதும் அடையாளம் காட்ட முடியும். தெற்கு ஆஸ்திரேலிய நகரமான ரோப் நகருக்கு மேற்கே 55 கிலோ மீட்டர் தொலைவில் அந்தப் பகுதி உள்ளது. அந்த பகுதி மீன்களுக்கான இழுவைப் பகுதி ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான பாகத்தை கண்டுபிடித்தபோது அவருடன் ஜார்ஜ் கியூரி (வயது 69) என்பவரும் உடன் இருந்ததாக கூறியிருக்கிறார்.

ஜார்ஜ் கியூரி கூறுகையில், ‘விமான இறக்கையை வெளியே கொண்டு வர முயன்றது மிகப்பெரிய அனுபவம். அது நம்பமுடியாத அளவுக்கு அதிக எடை கொண்டதாகவும், இழுப்பதற்கு கடினமாகவும் இருந்தது. அது வலையை நீட்டி கிழித்துவிட்டது. விசைப்படகில் தூக்கி வைக்க முடியாத அளவிற்கு பெரியதாக இருந்தது. பார்த்தவுடனே அது வர்த்தக விமானத்தின் மிகப்பெரிய பகுதி என்பது தெரிந்தது. அது வெள்ளை நிறத்தில் இருந்தது’ என்றார்.

விமான பாகத்தை தங்கள் படகில் ஏற்ற முடியாததால் சுமார் 20,000 டாலர் மதிப்பிலான வலையை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர். எனவே, காணாமல் போன விமானம் என்ன ஆனது என்ற மர்மத்திற்கு விடை அளிக்கும் முக்கிய தடயமாக, அவர்களின் அறுபட்ட வலை இருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.