
ஸ்கிரிப்டை விட சிறப்பாகவே வந்திருக்கிறது சலார் : பிரித்விராஜ்
மிகவும் ஆவலுடன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வரும் சலார் திரைப்படம் நாளை (டிச-22) வெளியாக இருக்கிறது. பிரபாஸ், பிரித்விராஜ், கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் என ஒரு மாஸ் கூட்டணியுடன் இந்த படம் உருவாகி இருப்பதால் நாளுக்கு நாள் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கூடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சலார் படத்தின் டீசர் மற்றும் சமீபத்திய புரமோ வீடியோ ஆகியவை வெளியானதில் இருந்து இந்த படம் எந்தவிதமாக இருக்கும் என பல யூகங்கள் கிளம்பியுள்ளன.
இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிரித்விராஜ். இந்த படத்தை கேரளாவில் அவரது சொந்த நிறுவனமே வெளியிடுவதால் இன்னும் கூடுதல் கவனம் எடுத்து புரமோஷன் நிகழ்ச்சிகளை கவனித்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “சலார் படத்திற்காக என்னை எப்படி அவர்கள் நினைத்தார்கள் என்பதே எனக்கு வியப்பாக இருந்தது. என்னிடம் நேரில் வந்து பிரசாந்த் நீல் கதை சொன்ன விதமும் இரண்டு நண்பர்களுக்கான கதையாக அவர் அதை உருவாக்கி இருப்பார் என்பதும் நான் எதிர்பாராதது. படத்தை பார்த்து விட்டவன் என்கிற வகையில் சொல்ல வேண்டும் என்றால் ஸ்கிரிப்ட் ஆக கேட்டதை விட படத்தில் இன்னும் சிறப்பாக வந்துள்ளது” என கூறியுள்ளார்.