புதுடெல்லி: மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது குறித்து ஸ்மிருதி இரானி பேசியது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தற்போது “எனக்கு குழந்தை பிறந்து இரண்டு – மூன்று நாட்களிலேயே நான் வேலைக்கு சென்றேன். என் குழந்தைக்கு உணவளிக்கும் வகையில் ஒரு வசதிகூட அங்கு இல்லை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது அந்த செட்டிலேயே எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது” என ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஸ்மிருதி இரானி தனது தொழில் வாழ்க்கையில் நீண்ட தூரம் பயணித்துள்ளார். அவர் ஒரு மாடலாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் தனது நடிப்புத் திறமையால் பல இதயங்களை வென்றார். அதன் பிறகு பெண் அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் ‘லால் சலாம்’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார் என்பது பலருக்குத் தெரியாது. மாநிலங்களவையில் சமீபத்தில் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “மாதவிடாய் என்பது இயலாமை அல்ல. பெண்களின் வாழ்க்கைப் பயணத்தில் அதுவும் ஓர் இயற்கையான பகுதி” என்று தெரிவித்தார். மாதவிடாய் குறித்த ஸ்மிருதி இரானியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் அவர் அளித்தப் பேட்டியில், “நான் நாடாளுமன்றத்தில் பேசியபோது, என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசினேன். பணியிடத்தில் பெண்கள் பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாக விரும்பாததால் மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு என்ற கொள்கையை எதிர்த்தேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், “எனக்கு குழந்தை பிறந்து இரண்டு – மூன்று நாட்களிலேயே நான் வேலைக்கு சென்றேன். என் குழந்தைக்கு உணவளிக்கும் வகையில் அங்கு வசதி இல்லை. எனவே, எனது ஸ்டுடியோவுக்கும், நான் வசிக்கும் இடத்துக்கும் இடையே 10 நிமிட இடைவெளி இருந்தது. அதனால் என் குழந்தையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவு இடைவேளை, தண்ணீர் இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளைகளை நான் கைவிட்டிருக்கிறேன். செட்டில் எனக்கு எந்தவித சிறப்பு வசதிகளும் இல்லை. ஆனால் அது எவ்வளவு முக்கியமானது என்று எனக்குத் தெரியும். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது அந்த செட்டிலேயே எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.