நேற்றுவரை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும், அவரின் மனைவிக்கும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் தண்டனையாக விதித்து தீர்ப்பளித்தது. அதோடு, இந்த வழக்கில் மேல்முறையீடு (உச்ச நீதிமன்றம்) செய்வதற்காக 30 நாள்களுக்கு (ஜனவரி 22-ம் தேதி வரை) தண்டனை நிறுத்திவைக்கப்படுவதாகவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்திலும் எதுவும் நடக்கவில்லை என்றால், இருவரும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் கீழமை நீதிமன்றம் கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பா.ஜ.க ஆட்சியில் பழிவாங்கும் படலம் நடப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தின்மீது நம்பிக்கை இருப்பதாகவும், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார்.
நேற்று பொன்முடியிடம் பேசிவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “தி.மு.க-வைப் பொறுத்தவரை எந்த வழக்கையும் சந்திக்கத் தயார். இப்படித்தான் 2-ஜி வழக்கையும் சொன்னார்கள். எந்த சி.ஏ.ஜி-யை வைத்து 2-ஜி வழக்கு போட்டார்களோ, அதே சி.ஏ.ஜி-தான் ஏழரை லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக மோடி மீது கூறியிருக்கிறது. இதெல்லாம் மக்களுக்குத் தெரியாதா… இந்த நீதிமன்றத் தீர்ப்பை பா.ஜ.க-வைத் தவிர வேறு யாராவது பரபரப்பாக பேசியிருக்கிறார்களா… யாரும் கண்டுகொள்ளவுமில்லை, வருத்தப்படவுமில்லை.

அரசியல் பழி வாங்கும் படலம் பா.ஜ.க ஆட்சியில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. நீதிமன்றத்தைப் பற்றி, நீதிபதியைப் பற்றி நாங்கள் குறைசொல்லவில்லை. உச்ச நீதிமன்றத்தின்மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த வழக்கில் எங்களுக்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. ஜெயலலிதாவைக் குறிப்பிட்டதுபோல இந்த தீர்ப்பில் ஏதாவது கூறியிருக்கிறார்களா… லஞ்சம் வாங்கினார், ஊர் பணத்தைக் கொள்ளையடித்தார், மக்கள் வரிப்பணத்தில் இப்படியெல்லாம் செய்தார் என்று ஏதாவது ஒரு வார்த்தை கூறி இருக்கிறார்களா… இல்லை” என்றார்.